சென்னையில் பெய்து வரும் கனமழை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பயத்தில் மூழ்கடித்து வருகிறது, மாநகராட்சி ஊழியர்களும், தமிழ்நாடு அரசும் மழைநீரை வேகமாக வெளியேற்றப் பல முயற்சிகள் செய்து வந்தாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மழை நீர் வடிவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இப்படியிருக்கும் வேளையில் சென்னையில் பல வீடுகளிலும், அப்பார்ட்மென்ட்களிலும் மழை வெள்ளம் புகுந்துள்ளது.
குறிப்பாக கொட்டிவாக்கம், பெரும்பாக்கம், பல்லாவரம், வேளச்சேரி போன்ற பகுதிகளில் பல இடங்களில் இருக்கும் அப்பார்ட்மென்ட் வீடுகளில் மழைநீர் தரைதளத்திலும், பேஸ்மென்ட்டிலும் புகுந்துள்ளது. இதனால் இப்பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிவிட்டு, வீட்டு விட்டு வெளியேறி வருகின்றனர்.

மழைவெள்ளம் புகுந்துள்ள வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட் எண்ணிக்கை என்னவோ தற்போது குறைவாக இருந்தாலும், இன்று இரவு மிக கனமழை பெய்யும் என்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இதனால் நாளை ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இதன் எதிரொலியாக நாளை அதிகப்படியான வீடுகளில் மழை வெள்ளம் புகும் அச்சம் உருவாகியுள்ளது. ஆனால் இதேவேளையில் நேற்று இரவு முதல் மாநகராட்சி ஊழியர்களும், தமிழ்நாடு அரசும் மழைநீரை வேகமாக வெளியேற்றப் பல முயற்சிகள் செய்து வருவதால் இரவு மழை பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாது எனவும் நம்பப்படுகிறது.
இதேபோல் சென்னையில் முக்கிய வர்த்தக பகுதியான கிண்டி-யில் இருக்கும் பிரபலமான ஒலிம்பிக் டெக் பார்க் முன் பகுதியில் அதிகளவிலான தண்ணீர் தேங்கி இருந்த வீடியோ பெரிய அளவில் வைரலானது.

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை நகர வாழ்க்கையைப் பாதித்துள்ளது. நேற்று இரவு முதல் தொடங்கிய மழை இன்று காலை வரை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, மணலி பகுதியில் 9.2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது, பிற பகுதிகளில் 6 சென்டிமீட்டர் வரையிலான மழை பதிவாகியுள்ளது,
இந்த கனமழைக்கு காரணம் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியே. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications