ஒவ்வொரு டிசம்பர் மாதமும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கும் சென்னை மக்கள் இந்த மழையால் மிகவும் மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். சென்னையில் ஒரு பகுதியில் மழை வெள்ளம் ஒரே நாளில் வடிந்தாலும், பல இடத்தில் இன்னும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால் 2 நாட்கள் வரையில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்கள் தற்போது அத்தியாவசிய உதவிகள் கிடைக்காத காரணத்தால் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர முடிவு செய்துள்ளனர். இதனால் இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் மீனவர்கள் உதவியுடன் பல படகுகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதில் ஒருபகுதியாகச் சென்னையில் ரேபிடோ பைக் டாக்சி சேவையை அளிக்கும் Rapido நிறுவனத்தின் 25 கேப்டன்கள் மற்றும் 15 உள்ளூர் மீனவர்கள் உட்பட 45 பேர் கொண்ட குழு, சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று 500-க்கும் மேற்பட்ட நபர்களைப் படகுகள் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதோடு வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கும் 300-க்கும் அதிகமான வீடுகளுக்கு உணவு மற்றும் உணவு பொருட்களையும் வழங்கியுள்ளனர். அண்ணாநகர் மற்றும் வேளச்சேரியின் துணை பகுதிகளான பேபி நகர், டான்சி நகர், விஜிபி செல்வா நகர், புவனேஸ்வரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 5 படகுகள் உதவியுடன் ரேபிடோ குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் பல பகுதிகளில் பல நிறுவனங்கள், பல தொழிலதிபர்கள் நேரடியாகவும், நிதியாகவும் உதவிகளை அளித்து வருகின்றனர். மழையின் ருத்ர தாண்டவம் வெள்ளக்காடாகச் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் காட்சி அளிப்பது மட்டும் அல்லாமல் பல இடத்தில் கார், பைக் என வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டு உள்ளது.
வண்டலூரில் சாலையோரத்தில் இருக்கும் கால்வாயில் 10க்கும் அதிகமான கார்கள் மிதந்து வருகிறது, மேலும் பல இடத்தில் கழிவு நீரால் மக்கள் அதிகம் தொற்று நோயால் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதோடு சென்னையில் ஏரி, குளம், கால்வாய் பகுதிக்கு அருகில் இருக்கும் பகுதிகள் தங்களுடைய இயல்பு நிலைக்குத் திரும்பக் குறைந்தது 1- 2 வாரம் ஆகும் எனவும் தெரிகிறது. மழை நீர் முழுவதுமாக வடிந்த பின்பு தான் இந்தப் பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பும்.


Click it and Unblock the Notifications