இந்தியாவில் சென்னை, பெங்களூர், ஐதராபாத், மும்பை , டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு மத்தியில் தொழில் வளர்ச்சி , உற்பத்தி , வேலை வாய்ப்பு , பொருளாதாரம் என பல்வேறு பிரிவுகளில் போட்டி அதிகமாக இருக்கிறது. இந்த போட்டியில் அனைத்து நகரங்களையும் பின்னுக்கு தள்ளி இருக்கிறது சென்னை.
ரியல் எஸ்டேட் சந்தையில் இந்தியாவின் அனைத்து பெரு நகரங்களையும் பின்னுக்கு தள்ளி சென்னை முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்தியாவின் பெருநகரங்களில் எல்லாம் ரியல் எஸ்டேட் சந்தை மந்தமாக இருக்கும் நிலையில் சென்னையில் மட்டும் சிறந்த வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. அதாவது வீடு விற்பனையில் சென்னை தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாகவே 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட ஆடம்பர வீடுகளில் தான் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கவனம் செலுத்த்துகின்றன. இது தான் தங்களுக்கு லாபம் தருகிறது என கூறும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் 1 கோடி ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட வீட்டு திட்டங்களை குறைத்து கொண்டே வருகின்றன.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட வீடுகள் விற்பனையில் இந்தியாவிலேயே சென்னை சாதனை படைத்திருக்கிறது. மற்ற நகரங்களில் இந்த வீடுகள் விற்பனை சரிவடைந்து இருக்கும் நிலையில் சென்னையில் மட்டும் 31% வருடாந்திர வளர்ச்சியை எட்டி இருக்கிறது. ஜே.எல்.எல் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி தேசிய அளவில் வீடு விற்பனை சரிந்து இருக்கிறது .ஆனால் சென்னையில் மட்டும் வீடு விற்பனை உயர்ந்து இருக்கிறது என தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் சென்னையில் 14,837 ஆடம்பர வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. புதிய ஆடம்பர வீடு திட்டங்களை அறிமுகம் செய்வது சென்னையில் 45 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது. மும்பை,பெங்களூரு,புனே ஆகிய நகரங்கள் வருடாந்திர வளர்ச்சியில் பின்தங்கி இருக்கும் நிலையில் சென்னை மட்டும் முன்னிலை வகிப்பதாக தெரிவித்திருக்கிறது.
பாரம்பரியமான தனி வீடுகளில் இருந்து நவீன அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்னை மக்களின் விருப்பம் மாறி இருக்கிறது இதுவே இந்த வளர்ச்சிக்கு காரணம் என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் தேடி வந்து சென்னையில் தங்களது ஜிசிசி மையங்களை அமைக்கின்றன.
இதனால் வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது குறிப்பாக நல்ல சம்பளத்துடன் கூடிய தரமான வேலை வாய்ப்புகள் அதிகரித்து இருப்பதால் ஏராளமானவர்கள் ஆடம்பர வீடுகளை வாங்க முன் வந்திருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.இது தவிர வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடு மற்றும் சென்னையின் பொருளாதார வளர்ச்சியும் வீடுகள் விற்பனை உயர்வதற்கு காரணமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications