பெரம்பூர்: சென்னையின் நான்காவது ரயில் முனையம் வில்லிவாக்கத்தில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அது கைவிடப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வில்லிவாக்கத்திற்கு பதிலாக பெரம்பூரில் ரயில் முனையம் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆர்.என்.சிங் சென்னை சென்ட்ரலில் ஏற்படும் ரயில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் வில்லிவாக்கத்தில் போதிய இடவசதி இல்லாததாலும் தனியாரிடம் நிலம் வாங்க வேண்டும் என்பதாலும் வில்லிவாக்கத்திற்கு பதிலாக பெரம்பூரில் நான்காவது ரயில் முனையம் அமைக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

பெரம்பூர் ரயில் நிலையம் பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் நகரின் மையத்தில் அமைந்துள்ளதால் அதை தேர்வு செய்திருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இதற்கான நில அளவை பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். மேலும் பெரம்பூர் ரயில் முனையம் அமைக்க போதுமான இடம் உள்ளதாகவும் தெரிவித்தார் சிங்.
இதற்காக பெரம்பூர் முதல் அம்பத்தூர் வரை 2 கூடுதல் ரயில் பாதை போடும் பணி தொடங்கப்பட உள்ளது, இதை தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய ரயில்வே துறைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார். இந்த திட்ட அறிக்கை இந்த ஆண்டு அக்டோபரில் அனுப்பப்படும் என்றும் அதன் பிறகு பெரம்பூர் முனையம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரயில்வே வாரியம் வெளியிடும் என்றும் கூறினார்.
இதனிடையே மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது 2024 - 25 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரயில்வே திட்ட பணிகளுக்காக 6,362 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது கடந்த ஆண்டை விட அதிகம் என தெரிவித்துள்ளார்.
மேலும் மாநிலத்தில் தற்போது 33,467 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். 77 ரயில் நிலையங்கள் கட்டமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கத்துக்கு இடையிலான கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் நடைபெற்று வருவதாகவும் வரும் அக்டோபர் முதல் இந்த ரயில் நிலையம் செயல்பட தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு புதிதாக 40 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது என கூறிய அவர், அதற்காக தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்தி தந்தால் விரைந்து பணியை முடிக்க தெற்கு ரயில்வே தயாராக இருக்கிறது என்றார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications