சென்னை: இந்திய ஐடி சேவைத் துறையில் மிகப்பெரிய டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) சென்னையில் சிறுசேரி சிப்கோட்டில் ஏற்கனவே மாபெரும் அலுவலகத்தை வைத்திருக்கும் வேளையில், புதிதாக ஒரு பிரம்மாண்டமான வளாகத்தை அமைக்க முடிவு செய்து, சத்தமில்லாமல் அதன் கட்டுமானத்தையும் துவங்கியுள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அதன் துவக்க நாளில் இருந்து தமிழ்நாட்டின் மீதும், தென்னிந்தியா மீதும் தனிப்பட்ட கவனத்தை செலுத்தி வருகிறது. இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனம் சென்னையிலும், கோயம்புத்தூரிலும் தற்போது பெரிய அளவில் விரிவாக்க பணிகளைச் செய்து வருகிறது. டிசிஎஸ் சிறுசேரி அலுவலகம் 71 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் வேளையில், தற்போது புதிய அலுவலகத்தை அமைக்கத் தயாராகியுள்ளது.

டிசிஎஸ் தற்போது கையில் எடுத்துள்ள புதிய கேம்பஸ் கட்டும் திட்டம் சுமார் ரூ.876 கோடி மதிப்பீட்டில் உருவாக உள்ளது. சுமார் 33.4 லட்சம் சதுர அடி பரப்பளவில், 11 மாடிகள் கொண்ட 3 கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த 3 மாபெரும் அலுவலகத்தில் சுமார் 25,000 பேரை பணியில் அமர்த்தும் இலக்கில் உள்ளது டிசிஎஸ்.

இதன் மூலம் சென்னையில் இனி வரும் காலத்தில் அதிகப்படியான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க டிசிஎஸ் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதேவேளையில் கோயம்புத்தூரிலும் டிசிஎஸ் தனது அலுவலகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் உள்ளதால் தமிழ்நாடு இளைஞர்களுக்கு டிசிஎஸ்-ல் பணியாற்ற வாய்ப்பு மிகவும் அதிகம்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்-ன் சென்னை சிறுசேரி வளாகம், ஆசியாவிலேயே மிகப்பெரிய ஐடி வளாகங்களில் ஒன்றாகும். சென்னை அலுவலகத்தில் இருந்து உலகளவில் பல நாடுகளுக்குச் சேவை அளித்து வருகிறது.

டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த புதிய வளாகம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஐடி சேவை துறையில் திறமையானவர்கள் உருவாகுவதற்கும் பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications