சென்னை: இந்தியாவில் புல்லட் ரயில் சேவையை கொண்டு வந்து அதன் மூலம் அனைத்து பகுதிகளையும் இணைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. முதல் புல்லட் ரயில் வழித்தடம் மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே செயல்படுத்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
புல்லட் ரயில்: தென்னிந்திய நகரங்களை இணைக்கும் வகையிலும் புல்லட் ரயில் சேவை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை ,பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் அமராவதி ஆகிய நான்கு நகரங்களையும் இணைக்கக்கூடிய வகையில் இந்த புல்லட் ரயில்கள் இயக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆந்திர மாநில முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு தென்னிந்திய நகரங்களை இணைக்கும் வகையிலான புல்லட் ரயில் திட்ட பணிகளுக்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

சந்திரபாபு நாயுடு தகவல்: நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சந்திரபாபு நாயுடு, கூடிய விரைவில் தென்னிந்திய மாநிலங்களுக்கு புல்லட் ரயில் வர இருக்கிறது இதற்கான ஆய்வு அறிக்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என கூறி இருக்கிறார். இந்த புல்லட் ரயில் சேவை வந்தால் ஹைதராபாத் ,சென்னை ,அமராவதி, பெங்களூரு உள்ளிட்ட நான்கு நகரங்களிலும் வசிக்கும் ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள் பலன் பெறுவார்கள் என சந்திரபாபு நாயுடு கூறியிருக்கிறார்.
7,000 கிமீக்கு அதிவேக ரயில் பாதை: முன்னதாக ஜப்பான் சென்று இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் அதிவேக ரயில் இணைப்புகளை கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது என புல்லட் ரயில் திட்டங்களை குறிப்பிட்டு பேசினார் . மும்பை அகமதாபாத் இடையிலான அதிவேக ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கூடிய விரைவில் 7000 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த அதிவேக ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய இந்தியா திட்டமிட்டு இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மும்பை புல்லட் ரயில்: இதன் ஒரு பகுதியாக தான் தற்போது தென்னிந்திய மாநிலங்களில் புல்லட் ரயில் திட்ட பணிகளுக்கான ஆய்வுப் பணி நடக்கும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது மும்பையில் நடைபெற்று வரக்கூடிய இந்த புல்லட் ரயில் பணிகள் முடிவுற்று, புல்லட் ரயில் சேவை பயன்பாட்டுக்கு வந்தால் மும்பையில் இருந்து அகமதாபாத் இடையிலான பயணம் வெறும் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் என குறைந்துவிடும்.
சென்னைக்கு புல்லட் ரயில்: தென்னிந்திய நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில்களுக்கான இந்த சாத்தியக் கூறு ஆய்வுகள் முடிந்து இந்த பகுதியில் பணிகள் நடைபெற்று புல்லட் ரயில் சேவை பயன்பாட்டுக்கு வந்தால் ஹைதராபாத் -சென்னை மற்றும் ஹைதராபாத் -பெங்களூரு இடையிலான பயண நேரம் 2 மணி நேரமாக குறையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர டெல்லி - வாரணாசி , மும்பை- ஹைதராபாத், சென்னை - மைசூர் உள்ளிட்ட வழித்தடங்களிலும் புல்லட் ரயில் திட்டங்களை கொண்டு வருவதற்கான திட்டத்தை மத்திய அரசு வைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications