திருச்சி: சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயில் டிக்கெட்டும் விமான பயண டிக்கெட்டும் ஒரே அளவாக இருப்பதாக எக்ஸ் தளத்தில் ஒருவர் வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாகி இருக்கிறது.
குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் மேற்கொள்ளலாம் என்பதாலேயே பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். ஆனால் விமான டிக்கெட்டுக்கு நிகராக ரயில் டிக்கெட்டும் இருப்பதாக எக்ஸ் தளத்தில் சுந்தர ராஜன் என்பவர் பதிவு வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் ரயில் சேவைகளை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சாமானிய மக்கள் பரவலாக பயன்படுத்தும் ஒரு சேவை இது. மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல குறைந்த டிக்கெட் கட்டணத்தில் பயணம் செய்ய ரயில்கள் வழிவகை செய்கின்றன. அந்தவகையில் அவசர தேவைக்காக பயணம் செய்பவர்களுக்காகவே தட்கல் டிக்கெட் சேவையை இந்திய ரயில்வே நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த டிக்கெட் வேண்டும் என்பவர்கள் பயணம் செய்யும் ஒருநாளுக்கு முன்பாக காலை நேரத்தில் டிக்கெட் புக் செய்துகொள்ளலாம்.
இந்நிலையில் சென்னையில் இருந்து திருச்சிக்கு தேஜாஸ் ரயிலில் செல்ல பிரீமியம் தட்கல் டிக்கெட்டின் விலை 2500 ரூபாய் வரை இருக்கிறது என தன்னுடைய எக்ஸ் பதிவில் சுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். அதே வேளையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் விமான டிக்கெட்டே 2200 ரூபாயில் தான் தொடங்குகிறது என கூறுகிறார். குறிப்பாக பயணம் செய்ய வேண்டிய அந்த நாளிலேயே கூட சென்னை திருச்சி இடையிலான விமான சேவைக்கு 2500 முதல் 3000 ரூபாய் வரை டிக்கெட்டுகள் கிடைக்கின்றன என தெரிவித்துள்ளார்.
தேஜாஸ் ரயிலில் எப்போதுமே டிக்கெட் கிடைப்பதில்லை கிடைத்தாலும் தட்கல் டிக்கெட்டுகள் விலை அதிகமாக இருக்கிறது என கூறுகிறார். ஏர் இந்தியா நிறுவனம் சென்னை மற்றும் திருச்சி இடையே ஒரு நாளைக்கு 4 விமான சேவைகளை இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ரயில்வே துறை கண் விழிக்க வேண்டிய நேரம் இது என கூறியுள்ளார்.
தேஜாஸ் ரயில் டிக்கெட்டை விட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் விமான டிக்கெட் குறைவாக கிடைக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். ரயிலில் பயணம் செய்ய முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் புக் செய்தால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும். ஆனால் அவசர தேவைக்காக எனும் போது ரயிலில் செல்ல நாம் தட்கல் டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளலாம். இதில் இருக்கும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளுக்கு தான் சில சமயங்களில் அதிக கட்டணம் விதிக்கப்படுகிறது. அதனை குறிப்பிட்டு தான் அவர் தன்னுடைய எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications