எளிய மக்கள் தங்களுடைய சாதாரண செயல்பாடுகளால் கூட மிகப்பெரிய சமூக மாற்றத்தை கொண்டு வந்துவிடுகிறார்கள். வாழ்க்கை நன்றாக இருக்க வேலை செய்ய வேண்டும் ,பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதெல்லாம் தாண்டி இந்த சமூக நலனுக்காகவும் பெண் கல்விக்காகவும் சென்னையை சேர்ந்த ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநர் எடுத்துள்ள முயற்சி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
சென்னையில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் ராஜீ அசோக்கிற்கு வயது 54. கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு ராஜீ தன்னுடைய கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. தன்னுடைய நிலை எந்த ஒரு பெண்ணுக்கும் வரக்கூடாது பெண் குழந்தைகள் கல்வியை கைவிடக் கூடாது என்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச ஆட்டோ சேவை வழங்குகிறார்.

சென்னையில் தி.நகர், கோடம்பாக்கம், அண்ணா நகர் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளி மாணவிகளை தனது ஆட்டோவில் இலவசமாக ஏற்றி சென்று பள்ளியில் விடுகிறார். அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவசம் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட தனது பிரத்யேகமான ஆட்டோவில் வலம் வருகிறார். இவரை பள்ளி மாணவிகள் 'ஆட்டோ அக்கா' என செல்லமாக அழைக்கின்றனர்.
தன்னுடைய சேவை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ள ராஜீ, 1992-ஆம் ஆண்டில், கேரளாவின் பாலக்காட்டிலிருந்து வெளியே வந்து நான் திருமணம் செய்து கொண்டேன். அப்போது BA Philosophy படித்து வந்த நான், என் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பிழைப்பிற்காக நானும் என் கணவரும் ஆட்டோ ஓட்ட தொடங்கினோம், என கூறியுள்ளார்.

ஒழுங்காக படிப்பை முழுமையாக முடித்திருந்தால் நம் நிலைமை இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே என்பதால் பெண் குழந்தைகளின் கல்விக்காக ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றியதாம். அதுமட்டுமில்லாமல் பேருந்துகளிலும் ஷேர் ஆட்டோக்களிலும் பயணம் செய்யும் பள்ளி மாணவிகள் சந்திக்கும் தொல்லைகள் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளை நேரில் பார்த்த ராஜீ, அவர்களுக்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய இலவச பயணம் என்ற திட்டத்தை கொண்டு வந்தாராம்.
பள்ளி வேலை நாட்களில் தினமும் காலையில் இரண்டு முறையும், மாலையில் மூன்று முறையும் சவாரி செய்து, நாள்தோறும் சுமார் 10 முதல் 15 மாணவிகளுக்கு இலவச பயணத்தை வழங்கி வருகிறார். இந்த இலவச சேவையின் மூலம் அவருக்குத் தினமும் தோராயமாக ரூ. 500 வரை வருமான இழப்பு ஏற்படுகிறது என்றாலும், அதைப்பற்றி அவர் கவலைப்படுவதில்லை. பள்ளிகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் ஆட்டோ ஸ்டாண்டுகள் அருகே காத்திருப்பாராம், பிங்க் நிற ஆட்டோவைக் கண்டவுடனே மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஓடிவந்து ஏறிக்கொள்வார்கள் என தெரிவிக்கிறார்.
இந்த பயணத்தில் பசியுடன் வரும் குழந்தைகளுக்கு உணவு தருவது, தண்ணீர் தருவது என தாயை போல அரவணைத்து கொள்வதாக கூறியுள்ளார். ராஜீ அசோக்கின் இந்த தன்னலமற்ற சேவை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications

