முதலமைச்சர் விஜய் தன்னுடைய அனைத்து பேச்சுகளிலுமே திமுகவை தவறாமல் அட்டாக் செய்துவிடுகிறார்கள். அந்த வகையில் கரூரில் அட்லஸ் அரங்கில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய் திமுகவை கடுமையாக சாடினார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து கிட்டதட்ட 9 மாதங்களுக்கு பின் விஜய் அங்கே சென்றதால் மிகுந்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், வாயை திறங்க சி.எம் என கூறுகிறார்கள் நான் பேசினாலே உடனே சட்டமன்றத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என திமுகவை சாடினார். மேகதாது அணை குறித்து விஜய் ஏன் பேசவில்லை, அவருக்கு என்ன தெரியும்? என கேள்வி எழுப்புகிறார்கள். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது அப்போது யார் ஆட்சியில் இருந்தது என கேள்வி எழுப்பினார்.

முந்தைய ஆட்சியில் சரியாக வாதாடவில்லை என எங்களாலும் கேள்வி எழுப்ப முடியும் என கூறிய அவர் வெறும் சவால் விட்டு கொண்டிருக்கும் ஆட்சி அல்ல இது Talk less work more ஆட்சி என கூறினார். அந்த மாநில முதல்வர் பேசுகிறார், நீங்கள் ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்புகிறார்கள். தமிழ்நாட்டின் உரிமையை எங்கே நிலை நிறுத்த வேண்டுமோ, அதற்காகதான் பணியாற்றுகிறோம். பழி போடுவது நமது அரசியல் கிடையாது என்றார்.
மத்திய அரசு, தொகுதி மறுவரையறை செய்யப் போவதாக பேச்சு அடிபடுகிறது. அதுபோன்ற எவ்வித தொகுதி மறுவரையறையையும் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது. நமக்கான இடத்தை யாரும் பறிக்கவும் முடியாது. அதை யாரும் பறிக்கவும் விட மாட்டோம் என கூறினார்.திமுகவும் அதிமுகவும் வேறு வேறல்ல, கூட்டுக் களவானிகள். எங்களுக்குள் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அவர்களால் அறிவிக்க முடியுமா? நிரூபிக்க முடியுமா? வருகின்ற இடைத்தேர்தலில் நிரூபித்துக் காட்டுங்கள் என ஆவேசமாக பேசினார்.
வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' தொடங்கப்படும் என அறிவித்தார். வாக்குறுதிகள் கொடுத்தார்களே என்ன ஆச்சு? என கேட்டார்கள். இப்போது அறிவிக்கிறோம். நாங்கள் ரீல் தாய்மாமன் அல்ல, ரியல் தாய்மாமன் என கூறினார்.
சட்டமன்றத்தில் கட்சி நிதி என்றதும் எதிர்க்கட்சிகள் பேரவையில் இருந்து ஓடிவிட்டார்கள் என்ற அவர் அவர் கட்சி நிதி என்று எந்த கட்சியின் பெயரையும் நான் சொல்லவில்லை, ஆனால் ஒரே ஓட்டம்தான். குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும். இவர்களால் ஒரே வேடிக்கையாக இருக்கிறது என பேசினார்.
சென்னையில் பாலம் கட்டுவதற்கு ஆகும் செலவைவிட அதிக செலவுக்கு டெண்டர் எடுத்து வைத்திருக்கிறார்கள். அதை ரத்து செய்திருக்கிறோம். ஒவ்வொரு துறையிலும் ஊழல்தான். லஞ்சம், ஊழல் ஒழிக்க முடியாது என்று சொன்னார்கள், இன்று அரசு அலுவலகங்களில் எந்த லஞ்சமும், ஊழலும் இல்லை. அலுவலகங்களில் வேலை வேகமாக நடக்கிறது. மக்கள் மரியாதையாக நடத்தப்படுகிறார்கள். அதை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
திமுக, அதிமுகவுக்கு இடைத்தேர்தலில் மக்கள் தக்க பதிலடி தர வேண்டும் என கூறிய அவர் திமுக அரசின் வெள்ளை அறிக்கையை சுருக்கமாக ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தார்கள், ஆனால் அந்த தண்ணீர் எங்கே போனது என்று தான் தெரியவில்லை என சாடினார். தங்களின் கூட்டணியை சோஃபா மாடல் , சோஃபா , வாஷிங் மெஷின் என்றெல்லாம் திமுக சாடுகிறது உண்மையில் அரசியல் வியாபார பிரிண்டிங் மெஷினே திமுக தான் என கூறினார்.
ஓட்டுக்கு காசு கொடுக்கும் கலாச்சாரத்தை அடித்து நொறுக்கி இருக்கிறோம், எங்களுக்கு குதிரை, கழுதை , ஒட்டகம் பேரம் தேவையில்லை மக்கள் எங்களுடன் இருக்கின்றனர் என கூறினார். அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது இது எங்கள் விஜயின் ஆட்சி என கூறுங்கள் என்ற விஜய் திமுக இன்னும் தாங்களே ஆட்சியில் இருப்பதாக கனவில் இருக்கிறது அவர்கள் விழித்து கொள்ள வேண்டும் என்றார்.
விஜய் அங்க போக கூடாது இங்க போக கூடாது என திமுக வழக்கு போடுகிறது நீங்கள் கனவில் இருக்கீங்களா திமுகவினரே முழிச்சி பாருங்க உங்க ஆட்சிக்கு வீட்டுக்கு போயாச்சு என சாடிய முதலமைச்சர் விஜய், நியாயமான அரசியல் திமுகவுக்கு தெரியாது , அவர்களை திருத்த முடியாது, எனவே மக்கள் இடைத்தேர்தலில் திமுகவை வெளுத்து விட வேண்டும் என கூறி பேச்சை முடித்து கொண்டார்.


Click it and Unblock the Notifications

