ரஷ்யா உக்ரைன் மீது போர்தொடுத்த நாளில் இருந்து சர்வதேச வர்த்தகம் இரண்டாக உடைந்துள்ளது. அதாவது ரஷ்யா-வுக்கு ஆதரவாக நிற்கும் நாடுகள் ஒருபக்கமும், உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கும் நாடுகள் ஒருபக்கம் என பிரிந்துள்ளது. இதில் சில நடுநிலையான நாடுகளும் உள்ளதை மறுக்க முடியாது.
ரஷ்யா உக்ரைன் போருக்கு பின்பு ரஷ்யாவின் வர்த்தகம், நிதிநிலைமை நாளுக்கு நாள் மெலிந்து வருகிறது, ஒருபக்கம் போருக்காக அதிகப்படியான செலவு செய்து வரும் விளாடிமிர் புடின் அரசு, மறுபுறம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அதிகப்படியான முதலீட்டை செய்து வருகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் மேற்கத்திய நாடுகளின் அதிகப்படியான தடைகள் ரஷ்யாவின் வர்த்தகத்தை எப்போதும் இல்லாமல் அதிகளவில் பாதித்துள்ளது. இந்த நிலையில் தான் ரஷ்யாவுக்கு அதிகப்படியான நிதி தேவை உருவாகியுள்ளது.
பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததில் இருந்து, பொருளாதாரத் தடைகள், மேற்கத்திய கடன் வழங்கும் நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேற அழுத்தம் கொடுத்ததன் மூலம் வெளியேறியது. இந்த இடைவெளியை சீனாவின் மிகப்பெரிய வங்கிகள் பயன்படுத்தி பில்லியன் கணக்கான டாலர்களை ரஷ்யாவிற்கு வழங்கி வருவதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
Kyiv ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் செய்த ஆய்வில் போருக்கு பின்பு, சீனாவின் நான்கு பெரிய வங்கிகள் ரஷ்யாவின் வங்கித் துறையில் தங்கள் வெளிப்பாட்டை நான்கு மடங்காக அதிகரித்துள்ளன என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
நான்கு சீன வங்கிகள் - பாங்க் ஆஃப் சைனா லிமிடெட், இண்டஸ்ட்ரியல் & கமர்ஷியல் பேங்க் ஆஃப் சைனா லிமிடெட், சைனா கன்ஸ்ட்ரக்ஷன் பேங்க் கார்ப்., மற்றும் அக்ரிகல்சுரல் பேங்க் ஆஃப் சைனா லிமிடெட். இவை அனைத்தும் சேர்ந்து 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் $2.2 பில்லியனைக் கொண்டிருந்தன.
ரஷ்ய மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளை பார்க்கும் போது இந்த ஆண்டு மார்ச் இறுதி வரையில் அதாவது ரஷ்யா உக்ரைன் போர் துவங்கிய 14 மாதங்களில் கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
சீன பொருளாதாரம் மேசமாக இருக்கும் வேளையிலும் ரஷ்யாவுக்கு கிட்டத்தட்ட 14 மாதத்தில் 7.8 பில்லியன் டாலர் நிதியுதவியை செய்துள்ளது. சீனாவின கடன் வலை குறித்து அனைவருக்குமே தெரியும், பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் பின்தங்கிய நாடுகளில் அதிகப்படியான முதலீடு செய்து தன் நாட்டு வர்த்தகத்தையும், அதிகாரத்தையும் மேம்படுத்தும் திட்டத்தை உலகில் பல நாடுகளிடம் செய்துள்ளது.
ஆப்பிரிக்காவில் பல நாடுகளை தொடர்ந்து பாகிஸ்தான், பங்களாதேஷ் என பல நாடுகளில் இதுபோன்று நடக்கிறது. இதன் வரிசையில் தற்போது ரஷ்யாவும் இடம்பெற்றுள்ளதா என்று கேள்வி எழுந்தாலும், சீனாவுக்கான கச்சா எண்ணெய் குடுமி ரஷ்யாவிடம் இருப்பதால் சீனாவின் கடன் வலை தந்திரம் ரஷ்யாவில் பலிக்காது என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications