2025 ஆம் ஆண்டில் இந்தியா மறக்க முடியாத ஒரு நிகழ்வாக மாறியது ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல். சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டினை அடுத்து இந்திய ராணுவம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது.
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்படக்கூடிய அபாயமும் ஏற்பட்டது. பின்னர் நிலைமை தணிந்தது. இந்த சூழலில் ஆபரேஷன் சிந்தூர் சமயத்தின் போது சீனா இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டது என அமெரிக்கா வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு அறிக்கை தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

சீனா இந்தியாவிடம் இரட்டை முகத்தை காட்டுவதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அறிக்கை தந்து இருப்பதாக சிஎன்என் நியூஸ் 18 சேனலில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சகம் தந்திருக்கக்கூடிய ஆய்வறிக்கையின் படி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீனா பாகிஸ்தானுக்கு மறைமுகமாக உதவிகளை செய்தது எனக் கூறியிருக்கிறது.

அதாவது சீனாவை பின்னணியாக கொண்டுதான் பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சுட்டி காட்டி இருக்கிறது. ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் பாகிஸ்தானுக்கு தகவல்களை வழங்குவது, சைபர் செயல்பாடு, உளவுத்துறை ஆதரவு மற்றும் ராஜாங்க ரீதியிலான பல்வேறு உதவிகளை சீனா தந்தது என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சீனாவின் சாட்டிலைட் கவரேஜ் மற்றும் எலக்ட்ரானிக் உளவு தகவல்கள் பாகிஸ்தானுக்கு இந்தியாவின் நடவடிக்கைகள் தொடர்பான பல துல்லிய தகவல்களை வழங்கியதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது .
அமெரிக்க ராணுவ தலைமையகம் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு சீனாவின் ராணுவ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் இந்த அறிக்கையை சமர்ப்பித்து இருக்கிறது . அதில் பாகிஸ்தானுக்கு சீனா பல்வேறு நவீன ஆயுதங்களையும் போர் விமானங்களையும் வழங்கி உதவி செய்திருப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. அமெரிக்க உளவுத்துறை இந்தியாவிற்கு எதிராக எல்லையில் அழுத்தம் கொடுக்க ஒரு ஆயுதமாக பாகிஸ்தானை சீனா தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது .
அதாவது சீனா இந்தியாவை திசை திருப்பவும் இந்திய அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவு படுத்தப்படாமல் நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் மறைமுகமாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தந்து வருகிறது என கூறி இருக்கிறது. அதாவது ஒரு பெரிய அளவிலான போரை உண்டாக்காமல் எல்லையில் எப்பொழுதும் இந்தியாவுக்கு பிரச்சனை உண்டாகக் கூடிய வகையில் சீனா செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அண்மை காலமாக தான் இந்தியாவும் சீனாவும் நெருங்கி வர தொடங்கியுள்ளன. இந்நிலையில் அமெரிக்கா இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications