மும்பை: அண்ணன் முகேஷ் அம்பானியோ ராக்கெட் வேகத்தில் மேலே வளர்ச்சி கண்டு கொண்டு இருக்க, தம்பி அனில் அம்பானியோ அதே வேகத்தில் வீழ்ச்சி கண்டு இருக்கிறார்.
ஏற்கனவே பல கடன் பிரச்சனைகளால் தவித்து வரும் அனில் அம்பானி, தனது சில சொத்துகளை கூட விற்று கடனை அடைத்து வருகிறார்.
இதற்கிடையில் கடந்த 2012ம் ஆண்டில் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் சீனாவின் மூன்று வங்கிகளிடம் 700 மில்லியன் டாலர் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
சீன வங்கிகளில் கடன்
இந்த கடனை அவர் சரியான நேரத்தில் செலுத்தத் தவறியதால் அவருக்குக் கடன் வழங்கிய இண்டஸ்ட்ரியல் & கமர்ஷியல் பேங்க் ஆஃப் சீனா, சீனா டெவலெப்மெண்ட் பேங்க் மற்றும் எக்ஸிம் பேங்க் ஆஃப் சீனா ஆகிய மூன்று வங்கிகளும் ஏற்கனவே அனில் அம்பானி மீது வழக்குத் தொடர்ந்திருந்தன.
அனில் அம்பானிக்கு எதிராக தீர்ப்பு
ஏற்கனவே பெருத்த கடன் நெருக்கடியால் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சென்ற ஆண்டில் திவால் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் கடன் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் தான் லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற அனில் அம்பானிக்கு எதிரான வழக்கில் கடந்த மே 22 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எவ்வளவு செலுத்த வேண்டும்?
அதன் படி அனில் அம்பானி அளித்த உத்தரவாதத்தின் படி, அவர் கடனை வட்டியோடு செலுத்தியே ஆக வேண்டும் என்றும், அந்தக் கடனைச் செலுத்த அவருக்கு 21 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகின. மேலும் அவர் அசலுடன் வட்டியும் சேர்த்து 717 மில்லியன் டாலரைச் செலுத்தியாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
சட்ட ரீதியாக அணுகல்
இதன் இன்றைய இந்திய மதிப்பு சுமார் 5,400 கோடி ரூபாயாக்கு மேலாகும். இந்த முடிவால் ரிலையன்ஸ் குழுமத்தின் மற்ற நடவடிக்கைகள் எதுவும் பாதிக்கப்படாது என்று அனில் அம்பானி தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அனில் அம்பானி அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள சட்ட ஆலோசகர்களை அணுகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
என்ன செய்ய போகிறது நீதிமன்றம்?
அதே நேரம் லண்டன் நீதிமன்றமும் இந்திய நீதிமன்றங்களை நோக்கி நகரலாம் என்றும் கூறப்படுகிறது. ஆக அனில் அம்பானிக்கு புது சிக்கல் ஒன்று வந்துள்ளது என்று தான் கூற வேண்டும். நட்பு நாடான இங்கிலாந்தின் தீர்ப்புகளை அப்படியே இந்திய நீதிமன்றங்கள் ஏற்குமா? அதனை நிறைவேற்றுமா? என்ன செய்யப்போகிறது?


Click it and Unblock the Notifications