சீனாவின் முன்னணி டிவி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஹைசன்ஸ் குழுமம் (Hisense Group), ஈபேக் டியூரபிள்ஸ் (Epack Durable) நிறுவனத்தின் துணை நிறுவனமான ஈபேக் மானுஃபேக்சரிங் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை வாங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய - சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் தாக்கிக்கொண்டதில் இருந்து, மத்திய அரசு சீன முதலீடுகளுக்கு பெரும் முட்டிக்கட்டை போட்டு வருகிறது. ஆனால் கடந்த காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைய துவங்கிய நிலையில் நாட்டின் வர்த்தகம், உற்பத்தி துறையை மேம்படுத்த சீன முதலீடுகளை அனுமதிப்பதில் தளர்வுகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இதேவேளையில் JSW குழுமம் சீனாவின் SAIC மோட்டார்ஸ் உடன் கூட்டணி வைத்து, இந்தியாவில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட நிலையில், தற்போது இதே பாதையை பயன்படுத்தி பல சீன நிறுவனங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது.
இதன் அடிப்படையில் தான் தற்போது ஹைசன்ஸ் குழுமம், Epack Durable's நிறுவனத்தில் முதலீடு செய்கிறது. இந்த நிறுவனம் தற்போது ஆந்திராவின் ஸ்ரீ சிட்டியில் பெரிய அளவிலான உற்பத்தி தளத்தை நிறுவுவதற்கான பணியில் இறங்கியுள்ளது.
இந்த முக்கியமான நிறுவனத்தில் சீனாவின் ஹைசன்ஸ் குழுமம் 26% வரை பங்கை வாங்க முடிவு செய்து, அதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்த புதிய தொழிற்சாலையில் ஏர் கண்டிஷனர்கள், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் சிறிய வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை ஹைசன்ஸ் பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும்.
ஈபேக் டியூரபிள்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அஜய் டி.டி. சிங்ஹானியா இந்த தகவலை உறுதிப்படுத்தினார். மேலும், இந்த தொழிற்சாலைக்கு அருகில் அருகில் ஒரு உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்களுக்கான பூங்காவை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது, இது ஹைசன்ஸின் இந்தியாவில் இருக்கும் நிலையை மேலும் உறுதிப்படுத்தும்.
இந்த தொழிற்சாலையை அமைக்க உருவாக்கப்பட்ட கூட்டணி நிறுவனம் தான் இந்த Epack Manufacturing Technologies, இதில் தான் சீனாவின் ஹைசன்ஸ் குழுமம் 26% வரை பங்கை வாங்க முடிவு செய்துள்ளது.
இந்த கூட்டணி, இந்திய அரசு வெளிநாட்டு நிறுவனங்கள், குறிப்பாக சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள், உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட அனுமதிக்கும் மாற்றத்தை காட்டுகிறது. எம்.ஜி மோட்டார், விவோ, ஹைர் போன்ற பிற சீன நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் கூட்டாணி வைத்து உற்பத்தியை விரிவாக்கம் செய்ய தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
விரைவில் ஹைசன்ஸ் குழுமம் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) செய்ய தேவையான அனுமதிகளை மத்திய அரசிடம் இருந்து பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications