சீனா என்ற உடன் சீனப் பெருஞ்சுவரோ அல்லது சீனாவின் உணவு பழக்க வழக்கங்களோ அல்லது சீன மக்களின் முகமோ நினைவுக்கு வந்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது.
இன்றைய தேதிக்கு "சீனா" என ஒரு வார்த்தையைச் சொன்னால், "கொரோனா வைரஸ்" என்கிற நோய் தான் நினைவுக்கு வருகிறது
அந்த அளவுக்கு கொரோனா வைரஸின் கோர தாண்டவம், சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் கொத்து கொத்தாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
கொரோனா அட்டூழியம்
கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என சீன அரசே மக்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறது. மக்கள் கலகலவென புழங்கிக் கொண்டிருந்த நகரங்கள் எல்லாம் பேய் பங்களா போல, ஆள் இல்லாமல் வெறிச் சோடி கிடக்கிறதாம்.
போக்குவரத்து கட்டுப்பாடுகள்
மேற்கொண்டு இந்த கொடூரமான கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, சீன அரசு, ஏகப்பட்ட விமானங்களை ரத்து செய்வது தொடங்கி பொது போக்குவரத்துகள் வரை பலவற்றுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது சீன அரசு. இந்த கட்டுப்பாடுகள், சீன பொருளாதாரத்தை நேரடியாகப் பாதித்து இருக்கிறது.
அலுவலகம்
இந்த இக்கட்டான சூழலில், சீனாவில் இயங்கும் அலுவலகங்கள் எல்லாம், வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் Work from Home கலாச்சாரத்தைக் கொண்டு வந்து கொண்டு இருக்கிறார்களாம். உற்பத்தி ஆலைகள், ஹோட்டல்கள், உணவகங்கள் போன்ற துறைகளைத் தவிர அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்க்கக் கூடிய வேலைகளை எல்லாம் வீட்டில் இருந்த படியே வேலை பார்க்கச் சொல்கிறார்களாம். ஆக ஒட்டு மொத்த சீனாவே யாரும் ஆஃபிஸுக்கு வராதீங்க.. என கதறிக் கொண்டு இருக்கிறது..!
சோதனை
இதுவரை வீட்டில் இருந்தே வேலை பார்க்கச் சொல்வது எல்லாம் ஒரு சலுகையாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இந்த கொரோனா வைரஸால் இன்று வீட்டில் இருந்து வேலை பார்ப்பது ஒரு அத்தியாவசிய அனுமதியாக பார்க்கப்படுகிறது. இந்த வீட்டில் இருந்து வேலை பார்ப்பதிலும் சில சிக்கல்கள் இருப்பதாகச் சொல்கிறார்களாம்.
சிக்கல்கள்
சீனாவில் சுமாராக 400 பேரைக் கொண்டு இயங்கும் Reprise Digital என்கிற ஷாங்காய் விளம்பரக் கம்பெனியின் நிர்வாக இயக்குநர், இந்த work from home கலாச்சாரத்தில் இருக்கும் சிக்கல்களைப் பற்றிப் பேசி இருக்கிறார். "விளம்பரத் துறையில் பலரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டி இருக்கும். இந்த கொரோனா வைரஸால் இப்போது நிறைய வீடியோ சாட் செய்து சமாளித்துக் கொண்டு இருக்கிறோம்" என்கிறார்.
தவிக்கும் வியாபாரம்
மேலே சொன்ன அலுவலக வேலைகள் தவிர, ஹோட்டல்கள், உற்பத்தி ஆலைகள், மால்கள், உணவகங்கள் என மற்ற வியாபாரங்கள் மிகவும் மந்தமாக இருக்கிறதாம். அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் நிறுவனங்களுக்கு ஒகே.. ஆனால் களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டிய வியாபாரங்களை எப்படி நடத்துவது என முதலாளிகள் யோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
நஷ்டம்
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நஷ்டம் வந்தால், நிறுவனங்கள் ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திலும் போனஸில் கை வைத்து விடமாட்டார்களா..? அந்த பயமும் சீன தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் எழுந்து இருக்கலாம். இன்னும் இந்த கொரோனா என்ன கோர தாண்டவங்களை ஆடப் போகிறதோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications