அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செவ்வாய்க்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் பேசும் போது, என்னுடைய ரெசிப்ரோக்கல் வரியால் பாதிக்கப்பட்ட நாடுகள் என்னிடம் கெஞ்சுகின்றன (kissing my a**). அமெரிக்கா உடன் ஒப்பந்தம் செய்துகொள்ளத் துடிக்கின்றன. 'தயவு செய்து ஒரு ஒப்பந்தம் செய்யுங்கள் ஐயா, நான் எதையும் செய்வேன், எதையும் செய்வேன் சார்' என்று கூறுகின்றன என்று டிரம்ப் உலக நாடுகளைக் கிண்டல் செய்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டும் அல்லாமல் உலக நாடுகளைக் கோபமடைய வைத்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் தீவிரமான வர்த்தகப் போருக்கு மத்தியில், டொனால்ட் டிரம்ப் சீனா மீது விதித்த 104 சதவீத வரிக்கு, பதிலடி கொடுக்க முடியாது என நினைத்துக்கொண்டிருந்த நிலையில், சீன அரசு சற்றும் எதிர்பார்க்காத வகையில் புதன்கிழமை அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது.

அமெரிக்காவின் புதிய வரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன அரசு அனைத்து அமெரிக்கப் பொருட்களுக்கும் கூடுதலாக 84 சதவீத வரியை விதித்துள்ளது. முன்பு, சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 34 சதவீத வரி விதித்திருந்த நிலையில் தற்போது இதை 84 சதவீதமாக உயர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த கூடுதல் வரிகள் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் அமெரிக்காவிலிருந்து வரும் பொருட்கள் மீது விதிக்கப்படும் என்று சீன நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க விதித்த 54 சதவீத வரிக்கு பதிலடியாக சீனா முன்பு 34 சதவீதத்தை அறிவித்திருந்த நிலையில் தற்போது இதை 84 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இதோடு மட்டுமல்லாமல், சீனா அரசின் வணிக அமைச்சகம் 12 அமெரிக்க நிறுவனங்களைத் தனது ஏற்றுமதி கட்டுப்பாட்டுப் பட்டியலில் சேர்த்துள்ளதோடு, 6 அமெரிக்க நிறுவனங்களைத் தனது "நம்பகமற்ற நிறுவனங்கள்" பட்டியலிலும் இணைத்துள்ளது. இது சீனாவில் இயங்கும், சீனாவில் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்குக் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, அமெரிக்கப் பங்குச் சந்தை எதிர்கால வணிகம் (US stock index futures) கூர்மையான சரிவைச் சந்தித்துள்ளது. சீனாவின் இந்த பதிலடி டிரம்ப் எதிர்பார்க்கவில்லை, ஆனால் சீனா அமெரிக்காவை 360 கோணத்திலும் எதிர்த்து நிற்கத் தயாராகியுள்ளது.
சீனா அரசு, அமெரிக்க ஆதிக்கத்தைக் குறைக்க கம்பியூட்டர் சிப்புகள், ஆயுத தயாரிப்பு மற்றும் மின்சார வாகன பேட்டரிகள் போன்ற உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அரிய தனிமங்களின் ஏற்றுமதியை அமெரிக்காவுக்கு மொத்தமாக நிறுத்தப்போவதாக அறிவித்தது. இதற்குப் பதிலடியாகத் தான் அமெரிக்கா 104 சதவீதம் என்ற வரியை விதித்தது.


Click it and Unblock the Notifications