சீனாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான BYD, அந்நாட்டில் டெஸ்லாவுக்கு தண்ணி காட்டிவிட்டு முதல் இடத்தை தட்டி சென்ற நிலையில், தற்போது ஆசிய சந்தையைக் குறிவைத்து களத்தில் இறங்கியுள்ளது.
BYD நிறுவனம் வியாழக்கிழமை தாய்லாந்தில் புதிதாக எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையைத் திறந்துள்ளது. இது தென் கிழக்கு ஆசியாவில் வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன சந்தையில் திறக்கப்படும் முதல் BYD ஆலையாகும். தென்கிழக்கு ஆசிய சந்தையில் BYD நிறுவனம் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் முன்னோடியாக உருவெடுத்துள்ளது.

BYD நிறுவனம் தாய்லாந்து அரசின் மானியங்கள் மற்றும் வரிச் சலுகைகள் துணையுடன் தொழிற்சாலையைத் துவங்கியுள்ளது. ஆனால் தாய்லாந்து நாட்டின் சலுகைகள் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்த காரணத்தால் சுமார் 1.44 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டைச் சீன எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் அந்நாட்டில் தொழிற்சாலை அமைப்பதற்கான முதலீடு செய்துள்ளனர்.
இப்புதிய திறப்பு விழாவில் BYD நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவர் Wang Chuanfu கலந்துகொண்டார். இந்த நிலையில் ஹாங்காங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள BYD நிறுவனத்தின் பங்குகள், ஜூன் 13ஆம் தேதியிலிருந்து அதிகபட்ச உயர்வைப் பதிவு செய்தது. இன்றைய வர்த்தகத்தில் BYD பங்குகள் 3.2% அதிகரித்து ஒரு பங்கு 237.60 ஹாங்காங் டாலருக்கு வர்த்தகமானது.
தாய்லாந்து அரசு 2030ஆம் ஆண்டுக்குள், தாய்லாந்தின் வருடாந்திர வாகன உற்பத்தி எண்ணிக்கை 25 லட்சம் வாகனங்களில் 30 சதவீதத்தை எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது. இதனை சாத்தியப்படுத்தவே மாபெரும் மானிய திட்டத்தை வெளியிட்டது.
தாய்லாந்து, நீண்டகாலமாக டொயோட்டா மோட்டார், ஹோண்டா மோட்டார் மற்றும் இசுசு மோட்டார்ஸ் போன்ற ஜப்பானிய கார் உற்பத்தியாளர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வரும் வேளையில் தற்போது சீன நிறுவனங்கள் தலைதூக்கத் துவங்கியுள்ளது.
இந்திய அரசு சீன முதலீடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ள காரணத்தால் இந்தியாவுக்கு வர வேண்டிய சீன முதலீடுகள் அனைத்தும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்று வருகிறது.


Click it and Unblock the Notifications