இலங்கையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் மக்களின் போராட்டம் காரணமாக அந்நாட்டின் அதிபர் கோத்தபயா ராஜபக்சே தலைமறைவாகியுள்ளார்.
இலங்கையின் இந்த நிலைமைக்கு காரணம் அந்நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஆகும்.
இந்த நிலையில் இலங்கையை அடுத்து வல்லரசு நாடுகளில் ஒன்றாக கருதப்படும் சீனாவில் திடீரென மக்கள் இதே பொருளாதார நிலைமைக்காக தெருவில் இறங்கி போராடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வைப்புநிதி முடக்கம்
சீனாவிலுள்ள ஹெனான் என்ற மாகாணத்தில் உள்ள சில வங்கிகள் திடீரென வாடிக்கையாளர்களின் வைப்புநிதியை முடக்கியது. தங்களுடைய வைப்புநிதிகளை தரவேண்டுமென வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியே கலவர பூமி போல் காணப்படுகிறது.
போராட்டம்
சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் உள்ள சில வங்கிகள் திடீரென வாடிக்கையாளர்களின் வைப்புநிதியை முடக்கியதற்கு ஹெனான் அரசாங்கத்தின் ஊழலே காரணம் என்று கூறப்படுவதால் மக்கள் கொதித்து எழுந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
வங்கி வாடிக்கையாளர்கள்
கடந்த ஏப்ரல் மாதமே வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் வைப்புநிதியை திரும்ப தரக்கோரி போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருவதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை நிலை சீனாவுக்கு
வங்கிகளின் இந்த செயல் காரணமாக இலங்கையை போலவே சீனாவும் கலவர பூமியாக மாறியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள வைப்பு நிதிகள் முடக்கப்பட்டன என்றும், கடந்த இரண்டு மாதங்களாக வங்கி வாடிக்கையாளர்கள் சிறுசிறு போராட்டம் நடத்தி வந்த போதிலும் வங்கி நிர்வாகங்கள் அந்த போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.
ஆட்டம் காணும் சீன அரசு
இதனையடுத்து நேற்று ஆயிரக்கணக்கான வங்கி வாடிக்கையாளர்கள் சீனாவின் மத்திய வங்கியின் முன் கூடி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். இதனால் சீன அரசு ஆட்டம் கண்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் சீனாவில் நடந்த மிகப்பெரிய போராட்டம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
3.5 பில்லியன் டாலர்
ஹெனான் மாகாணத்தில் உள்ள Yuzhou Xinminsheng கிராம வங்கி, Zhecheng Huanghuai வங்கி, ஷாங்காய் ஹூமின் கிராமப்புற வங்கி, நியூ ஓரியண்டல் வில்லேஜ் வங்கி, Yixian கவுண்டி கிராம வங்கி ஆகிய வங்கிகள் வாடிக்கையாளர்களின் சுமார் 3.5 பில்லியன் டாலர் வைப்புநிதியை முடக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வங்கி அதிகாரிகள் விளக்கம்
இது குறித்து வங்கி அதிகாரிகள் விளக்கம் கூறிய போது வைப்புநிதி முடக்கம் செய்யப்பட்ட வங்கிகளில் விசாரணைக்கு பின்னர் முடக்கம் செய்யப்பட்ட வைப்புநிதிகள் வாடிக்கையாளர்களுக்கு படிப்படியாக வழங்கப்படும் என்று கூறினர். ஆனால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு உடனடியாக வைப்பு தொகையை வங்கிகள் தர வேண்டும் என்றும் தாங்கள் இதுநாள் வரை விடுத்த கோரிக்கைகளுக்கு வங்கிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர்.
கலவர பூமி
இந்த நிலையில் வங்கி நிர்வாகங்களுக்கு எதிராக போராடும் வாடிக்கையாளர்கள் மீது அந்நாட்டு காவல்துறை தடியடி நடத்தியதாகவும் இதனால் பலர் காயம் அடைந்ததாகவும் இதனை அடுத்து இந்த போராட்டம் வன்முறையாக மாறி உள்ளதால் தற்போது கலவர பூமியாக ஹெனான் பகுதி காட்சி அளிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன அரசு தலையிடுமா?
இந்த பிரச்சனையில் சீன அரசு தலையிட்டு உடனடியாக தீர்க்க வேண்டும் என்றும் இல்லையேல் இந்த போராட்டம் நாடு முழுவதும் வெடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் ஊடகங்கள் மூலம் பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications