சீனா இந்தியாவுக்கு எல்லையில் பிரச்சினை கொடுத்து வந்த நிலையில் தற்போது புதிய வழிகளில் குடைச்சல் கொடுக்க தொடங்கியுள்ளது. அரியவகை காந்தங்களை தொடர்ந்து பிரத்தியேக உரங்களின் சப்ளையையும் சீனா நிறுத்தி வைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
பல்வேறு நாடுகளுக்கும் வேளாண்மைக்கு தேவையான உரங்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது சீனா. இந்தியாவில் பழங்கள் ,காய்கறிகள் மற்றும் பிற பயிர்களின் விளைச்சலை அதிகப்படுத்துவதற்காக இந்த பிரத்தியேக உரங்கள் சீனாவில் இருந்து தான் 80% இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் சீனா திடீரென அத்தகைய உரங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. கிட்டதட்ட இரண்டு மாதங்களாக சீனா இந்த உரங்களை இந்தியாவுக்கு அனுப்பவில்லை என எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.

கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாகவே சீனா இந்தியாவிற்கு உரங்களின் சப்ளையை கட்டுப்படுத்தி வந்தது என்றும் தற்போது அதனை முழுமையாக நிறுத்தி வைத்திருக்கிறது என்றும் உரங்களுக்கான கூட்டமைப்பை சேர்ந்த தலைவர் ராஜிவ் சக்ரவர்த்தி தெரிவித்திருக்கிறார். சீனா மற்ற நாடுகளுக்கு தொடர்ந்து இத்தகைய உரங்களை ஏற்றுமதி செய்கிறது ஆனால் இந்தியாவிற்கு மட்டும் அது நிறுத்தி வைத்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.
சீனா கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா முக்கியமாக சீனாவை சார்ந்திருக்கும் பொருட்களை பொருட்களின் விநியோகத்தை தொடர்ந்து கட்டுப்படுத்திய வண்ணம் இருக்கிறது. அண்மையில் கூட வாகன உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அரியவகை காந்தங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யாமல் சீனா நிறுத்தி வைத்திருந்தது. இதன் காரணமாக வாகன உற்பத்தி பாதிக்கப்படும் சுழல் உண்டானது.

இந்த நிலையில் பிரத்தியேக ரக உரங்களின் ஏற்றுமதியையும் சீனா நிறுத்தி வைத்திருக்கிறது. இந்தியா ஆண்டுதோறும் ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சீனாவிடம் இருந்து 1.5 லட்சம் முதல் 1.6 லட்சம் டன்கள் வரையிலான உரங்களை இறக்குமதி செய்கிறது. இத்தகைய நுண்ணுயிரி ஊட்டச் சத்து உரங்கள் நாடு முழுவதும் பரவலாக பயன்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. இவை விளைச்சலை அதிகப்படுத்துகின்றன ,மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன என விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்தியாவில் இத்தகைய உரங்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் இல்லை எனக் கூறும் இந்த துறை சார்ந்த நபர்கள், அரசு வேறு நாடுகளில் இருந்து இத்தகைய உரங்களை இறக்குமதி செய்ய முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.சீன அரசு நேரடியாக தடை விதிக்கிறோம் என அறிவிக்காமல், ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் உரங்களை துறைமுகங்களிலேயே பிளாக் செய்து வைத்திருக்கிறது என சொல்லப்படுகிறது. இதே போல இந்தியாவில் புல்லட் ரயில்களுக்கு பயன்படுத்தப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை ஜெர்மனி நிறுவனம் சீனாவில் உற்பத்தி செய்து வைத்திருக்கிறது. அது இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய தயாராக இருந்த நிலையில் ஆய்வு என்றபெயரில் சீன அரசு அதையும் நிறுத்தி வைத்திருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications