சீன அரசாங்கம் தனது பொருளாதாரத்தை வலுப்படுத்த கடுமையான வரி வசூல் நடவடிக்கையை அந்நாட்டு பணக்காரர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அந்நாட்டின் அரசு வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த தீவிர வரி நடவடிக்கை, முதலீட்டாளர்கள் மத்தியிலான நம்பிக்கை குறைத்து, பொருளாதார வளர்ச்சியின் மீதான தடுமாற்றத்தைக் கூடுதலாக அதிகரிக்கும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
சீன வரி அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தற்போது பணக்காரர்கள் மற்றும் நிறுவனங்களை தங்கள் வரிப் பொறுப்புகளை தன்னிச்சையாக ஆய்வு செய்யுமாறு வலியுறுத்துகின்றனர். இந்த ஆய்வில் ஏதேனும் முறைகேடு, நிலுவைத் தொகை போன்றவை இருந்தால் அதை உடனடியாக தீர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த உத்தரவின் மூலம் வரி செலுத்துபவர்கள் தங்கள் கடந்த கால வரி தாக்கல் மற்றும் வரி செலுத்திய செயல்முறைகளை மறுபரிசீலனை செய்து, கூடுதலாகச் செலுத்த வேண்டிய வரிகளைத் தானாக முன்வந்து செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், தனிநபர்கள் தங்கள் வெளிநாட்டு முதலீட்டின் மூலம் கிடைத்த லாபங்களுக்கும் வரி செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சீனா அரசின் இந்த அறிவிப்புக்குப் பின்னால் பெரிய அளவிலான டேட்டா சேகரித்து வைத்திருக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
இந்த அறிவிப்பைத் தாண்டியும் வரி ஏய்ப்பு, பொய் கணக்குக் காட்டும் பணக்காரர்கள், நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைச் சொல்லாமல் சொல்லியுள்ளது. இது சீனா முதலீட்டுச் சந்தையில் அடுத்த Crackdown-க்கான வழியைத் திறந்துள்ளதாக தெரிகிறது.
இதனால் சீன பணக்காரர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர், சீனா அரசு வரி ஏய்ப்பு, லஞ்சம், நிதி ஏமாற்றம் போன்ற குற்றங்களுக்குக் கடுமையான தண்டனையை வழங்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இதனாலேயே சீன பணக்காரர்கள் தங்களுடைய வரி கணக்கை ஆய்வு செய்ய துவங்கியுள்ளனர்,
இந்த கடுமையான நிதி கட்டுப்பாடுகள் மூலம் பலர் தங்கள் முதலீடு செய்வதற்கான விருப்பத்தையும், செலவிடுவதையும் குறைக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
சீன பொருளாதாரம் ரியல் எஸ்டேட் மந்தநிலை, ஏற்றுமதி குறைவு மற்றும் வேலையின்மை அதிகரிப்பு உள்ளிட்ட கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த பிரச்சினைகளைத் தீர்க்க, அரசாங்கம் பணவீக்கத்தைக் குறைத்தல் மற்றும் நிதி உட்செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது.
சீனா ரியல் எஸ்டேட் துறையின் நில விற்பனை மற்றும் வரிகளைப் பெரிதும் நம்பியிருக்கும் சீன உள்ளூர் அரசாங்கங்கள் பொருளாதார மந்தநிலையின் காரணமாக நிதி கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications