சீனாவின் பிரபலமான ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் ஆப்கள் உட்பட, சீனாவின் 43 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இது இந்தியா - சீனா இடையே நிலவி வரும் பதற்றமான நிலையில் வந்துள்ளது. ஏற்கனவே பல கட்டமாக இரு நாடுகளும் பேச்சு வார்த்தைகளை நடத்தியும், இப்பிரச்னை முடிந்தபாடாக இல்லை.
ஏனெனில் சீனா, லடாக் பிரச்னை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதே நேரத்தில், டோக்லாமில் அது சாலைகள், கிராமம் அமைத்திருப்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சீன ஆப்களுக்கு தடை
ஏற்கனவே இந்திய வீரர்கள் பலர் பலியான நிலையில், சீனாவை சேர்ந்த 59 ஆப்களுக்கு கடந்த ஜூன் 29ல் மத்திய அரசு தடை விதித்தது. பின்னர், செப்டம்பர் 2ம் தேதி மேலும் 118 ஆப்களுக்கு தடை விதித்தது. பப்ஜி, டிக்டாக் போன்ற பிரபல ஆப்கள் இதில் அடக்கம். இந்நிலையில் சீனாவை சேர்ந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் ஆப்கள் உட்பட 43 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தற்போது தடை விதித்தது.
எதற்காக தடை
நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிய வந்ததால், இந்த தடை விதிக்கப்பட்டதாக அது விளக்கம் அளித்துள்ளது. இந்திய இணையவழி குற்றத்தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அளித்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன பின்னணி
மேலும் தடை செய்யப்பட்ட அனைத்து செயலிகளும் சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை. அல்லது சீனாவுடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பில் உள்ள ஒரு ஆப்பாகும். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், சீனாவின் பிரபலமான அலிபாபா நிறுவனத்தின் அலிஎக்ஸ்பிரஸ், அலிபே கேஷியர், கேம்கார்டு,வீடேட் உள்ளிட்ட பல முக்கிய ஆப்களும் இதில் அடங்கும்.
சீனா தரப்பில் எதிர்ப்பு
இதற்கிடையில் சீனா பின்னணி கொண்ட செல்போன் செயலிகளை தடை செய்வதற்கு, தேசிய பாதுகாப்பினை சுட்டிக் காட்டுவதை நாங்கள் எதிர்க்கிறோம் என சீன செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் கூறியுள்ளார். அதுமட்டும் அல்ல, இந்தியாவின் இந்த நடவடிக்கை உலக வர்த்தக அமைப்பின் நடவடிக்கைக்கு எதிரானது என்றும் ஜி குற்றம் சாட்டியுள்ளார். .


Click it and Unblock the Notifications