அசுர வேகத்தில் வளர்ந்து வந்த சீனாவின் பொருளாதாரம், அமெரிக்கா உடனான வர்த்தகப் பிரச்சனைகள், வர்த்தகத் தடைகள், கட்டுப்பாடுகள் மூலம் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளத் துவங்கியது. இதைத் தொடர்ந்து சீனாவில் இருந்து நிறுவனம் வெளியேறியது, ரியல் எஸ்டேட் பிரச்சனை, அரசியலில் சிறு தடுமாற்றம் ஆகியவற்றுக்கு மத்தியில் கொரோனா தொற்று.
ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு தலைக்கு மேல் இருக்கும் பல பிரச்சனைகளைக் கவனித்து வந்த நிலையில், அஸ்திவாரத்தில் இருந்த மிகப்பெரிய பிரச்சனையைக் கவனிக்க மறந்துவிட்டது. ஆம் மக்கள் தொகை பிரச்சனை..

ஜப்பான் நாட்டைப் போலவே சீனாவும் அதிகப்படியான முதியோர்கள், குறைவான இளம் தலைமுறையினர் என அந்நாட்டின் எதிர்காலத்திற்கு வேட்டு வைக்கும் வகையில் புதிய பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
சீனாவின் 2023 ஆம் ஆண்டில் இரண்டாவது ஆண்டாகத் தொடர்ச்சியாக மக்கள்தொகை குறைந்து வருகிறது. 2023ல் முடிந்த நிலையில் அந்நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை வெளியாகியுள்ளது, கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் வருடாந்திர அடிப்படையில் சீனாவின் மக்கள்தொகை எண்ணிக்கை 2 மில்லியன் அதாவது 20 குறைந்துள்ளது.
சீனாவில் COVID-19 கட்டுப்பாடுகளை நீக்கிய பின்னர் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, பிறப்பு விகிதம் குறைந்துள்ளது ஆகியவற்றின் மூலம் சுமார் 20 லட்சம் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளது என்று சீன அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
2022 ஒப்பிடுகையில் 2023ல் சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்து 690,000 ஆக அதிகரித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கி, 2023 ஆண்டுப் பிப்ரவரி வரை தொடர்ந்த COVID-19 தொற்று பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதன் மூலம் 2023 முடிவில் சீனாவின் மொத்த மக்கள்தொகை 1.4 பில்லியனாக உள்ளது என அந்நாட்டின் புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, நீண்ட காலமாக உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமையைக் கொண்ட சீனா, 2023ல் இந்தியாவுக்குத் தனது இடத்தை விட்டுக்கொடுத்துவிட்டு இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
மேலும் சீனாவில் தொடர்ந்து 7வது ஆண்டாகப் பிறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2023ல் 90 லட்சம் குழந்தைகள் பிறந்த நிலையில், 2022 எண்ணிக்கையை ஒப்பிடுகையில் 5,40,000 குறைந்துள்ளது. 2016ல் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் 90 லட்சம் குழந்தைகள் எண்ணிக்கை பாதி மட்டுமே.
இந்தப் பிறப்பு, இறப்பு விகிதம் சீன நாட்டு அளவீடு மட்டுமே, இதில் ஹாங்காங், மக்காவ் ஆகியவை இதில் இல்லை. சீனாவில் தற்போது பிறப்பு விகிதத்தில் குறைவு, இறப்பு விகிதம் உயர்வு, வயதானவர்களின் எண்ணிக்கை நிலையான வேகத்தில் அதிகரிப்பு ஆகியவை சீனாவின் பொருளாதாரம், வர்த்தகம், உற்பத்தி, ஏற்றுமதி என அனைத்திலும் பாதிக்கும்.
சீனாவில் பிரபலமான ஒரு குழந்தை திட்டத்தின் விளைவு 2012 முதல் அந்நாட்டு அரசு உணர்ந்தது. இதனால் மக்கள் தொகை அதிகரிக்க 2015 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் சீன அரசு அந்நாட்டு மக்களை 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வலியுறுத்தினர். 2021ல் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வலியுறுத்தியது.
ஆனால் மக்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் விலைவாசி, வாழ்க்கை முறை, ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு குழந்தை திட்டத்தைத் தொடர்கின்றனர். இதைவிட முக்கியமாகத் தற்போது சீனாவில் No Child பாலிசி 2K கிட்ஸ் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்து வருகிறது. இந்தப் பிரச்சனைகளை எவ்வளவு பணம் கொடுத்தாலும் சரி செய்ய முடியாது என்பது முக்கியமானது.


Click it and Unblock the Notifications