டெல்லி: இந்தியா சீனா இடையிலான உறவு தற்போது மீண்டும் மேம்பட தொடங்கி இருக்கிறது. அமெரிக்காவின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் இரு நாடுகளும் மீண்டும் இணைந்து செயல்படுவதற்கான பணிகளை தொடங்கியிருக்கின்றன .
சீன அமைச்சர் வாங் யீ: இதன் ஒரு பகுதியாக தான் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்த மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு செல்ல இருக்கும் நிலையில் வாங் யீ-இன் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமை அன்று டெல்லிக்கு வருகை தந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ-ஐ மத்திய வெளியேறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.

அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: இதனை அடுத்து இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது, ஏற்கனவே இருக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டது. பிரச்சினைகளை தீர்த்து இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்துவது என இரு தரப்பிலும் உறுதி அளிக்கப்பட்டது.
உரம், அரிய வகை காந்தம்: சீனாவை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவிற்கு வரவேண்டிய சில பொருட்களை ஏற்றுமதி செய்யவிடாமல் துறைமுகத்திலேயே தடுத்து வைத்திருந்தது. குறிப்பாக சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வரவேண்டிய உரங்கள் துறைமுகங்களிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தன. அதேபோல வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் அரிய வகை காந்தங்களும் சீன நிறுவனங்கள் இந்தியாவிற்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்திருந்தன.

சுரங்கம் தோண்டும் இயந்திரம்: அடுத்ததாக சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் சீனாவில் இருந்து தான் இந்தியாவிற்கு வரவேண்டும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் இந்த இயந்திரம் மிகவும் முக்கியமானது . இவற்றை சீனா இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய விடாமல் தடுத்தது. இந்த மூன்று பிரச்சனைகள் குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான பேச்சு வார்த்தையின் போது முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டது.
மக்கள் பாதிப்பு: ஏனெனில் உரங்கள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு இருப்பதால் வேளாண் உற்பத்தியில் பாதிப்பு, அரியவகை காந்தங்கள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு இருப்பதால் வாகன உற்பத்தியில் பிரச்சனை மற்றும் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் வராததால் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த முடியாத சூழல் என இந்த மூன்றுமே மக்களிடையே நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன.
நல்ல செய்தி சொன்ன அமைச்சர்: இது குறித்து மத்திய அரசு சீன அமைச்சர் வாங் யீ இடம் எடுத்துரைத்திருக்கிறது . அப்போது இந்த மூன்று பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உறுதி அளித்திருக்கிறார். இது இந்தியாவிற்கு சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
இனி பிரச்சினை இல்லை: அரிய வகை காந்தகங்களை சீனா இந்தியாவிற்கு அனுப்பாததால் பல நிறுவனங்கள் வாகன உற்பத்தியையே நிறுத்திவிடும் சூழல் உண்டானது. அவர்களுக்கு தற்போது நிம்மதி ஏற்பட்டுள்ளது. உரங்கள் ஏற்றுமதியை சீனா நிறுத்தி வைத்திருந்ததால் இந்தியா வேறு நாடுகளில் இருந்து அதிக விலைக்கு உரங்களை இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது. இனி அந்த நிலை மாறும். மெட்ரோ உள்ளிட்ட கட்டுமான திட்டங்களுக்கு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் வராமல் பணிகள் தாமதமாகின்றன அந்த பிரச்சினையும் இனி மாறும்.


Click it and Unblock the Notifications