உலகம் முழுவதும் ஏஐ, டேட்டா சென்டர், கிளவுட் கம்பியூட்டிங், குவான்டம் கம்பியூட்டிங் என மின்சாரம் அதிகம் தேவைப்படும் துறைகள் முக்கியத்துவம் பெற்று வரும் வேளையில் சீனா தனது சோலார் மின்சாரம் துறை சார்ந்த 12 தொழில்நுட்பத்தை ஏற்றுமதி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
சீனா அரசு தற்போது உலகளாவிய போட்டியின் காரணமாக பாதுகாப்புத் துறை, ஏரோஸ்பேஸ், ஏஐ மற்றும் பயோடெக்னாலஜி துறை சார்ந்த பிரிவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வரும் வேளையில் சோலார் மின்சார உற்பத்தித் துறையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுகுறித்து சீனா வர்த்தக துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் சீன ஏற்றுமதி கட்டுப்பாட்டுப் பட்டியலில் போட்டோவோல்டாயிக் தொழில்நுட்பம் உட்பட சோலார் எனர்ஜி பிரிவில் 12 தொழில்நுட்பம் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
சோலார் மின்சார உற்பத்தி தொழில்நுட்பத்தை ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்புத் துறையில் அதிகம் பயன்படுத்தும் காரணத்தால் இத்துறையில் பெரும் கண்காணிப்பும், கட்டுப்பாடும் அவசியமாகியுள்ளது என தெரிவித்துள்ளது.
இந்த வருடம் ஏப்ரல் மாதம் சீன அரசு நவீன மற்றும் மேம்பட்ட சோலார் பேனல் உற்பத்தி தொழில்நுட்பத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து இத்துறை அதிகாரிகளிடமும், நிறுவனங்களிடமும் தீவிரமான ஆலோசனையை நடத்தியது. இதன் பின்பு தற்போது தடை உத்தரவு வெளியாகியுள்ளது, சீன அரசின் இத்தகைய தடை மற்றும் கட்டுப்பாடுகளின் பொருள் என்ன..?
ஏற்றுமதி கட்டுப்பாட்டுப் பிரிவில் சேர்க்கப்பட்டால், அத்துறையை அல்லது அப்பொருளின் ஏற்றுமதியைச் சீனா அரசு தீவிரமாகக் கண்காணிக்கும். யார் வாங்குகிறார்கள், எதற்காக வாங்கப்படுகிறது, இதன் இறுதி பயன்பாட்டு இடம் என்ன, விற்கும் சீனா நிறுவனம், வாங்கும் வெளிநாட்டு நிறுவனம் என அனைத்தையும் ஆய்வு செய்த அதன் பின்பு தான் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும். அதுவரையில் ஒரு சோலார் பேனல் கூட வெளியில் செல்லாது.
இதற்கு முன்பு அரிய உலோகத்தால் செய்யப்பட்ட காந்தம் இப்பட்டியலுக்குள் கொண்டு வரப்பட்ட போது இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முதல் அமெரிக்க பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் வரையில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டது.
தற்போது விதிக்கப்பட்ட தடை மூலம் இந்தியாவுக்கு வரும் சோலார் பேனல் தொழில்நுட்பமும் பாதிக்கப்படும். இந்தியாவில் மின்சார தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் காரணத்தால் சோலார் மின்சாரம் தான் இதற்கான தீர்வு என மத்திய அரசு, மாநில அரசு, மக்களும் நம்பிய நிலையில்..
இந்தியாவில் சோலார் பேனல் உற்பத்தி தளத்தை மேம்படுத்த அனைத்து நிறுவனங்களும் தயாராகி வரும் வேளையில் விரைவில் சர்வதேச சந்தைக்கும் செல்ல இலக்கு வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடிவு செய்து இப்பிரிவில் 12 தொழில்நுட்பத்திற்கு தற்போது ஏற்றுமதி கட்டுப்பாடு பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த தடை செய்யப்பட்ட பட்டியலில் தற்போது உலகம் முழுவதும் டிரெண்டாகும் Perovskite தொழில்நுட்பமும் அடங்கும்.


Click it and Unblock the Notifications

