சீனாவில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள், இந்தியத் தொழில்துறையில் கடுமையான நெருக்கடியை உருவாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அரிய பூமி காந்தங்கள் (Rare Earth Magnets) அடங்கிய பாகங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்துறை இயந்திரங்கள் போன்ற துறைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்புக்குப் பின், இந்திய நிறுவனங்கள் சற்று மீண்டு வரத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், சீனாவின் இந்தக் கட்டுப்பாடு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து மூத்த ஆட்டோமொபைல் துறை நிர்வாகிகள் அளித்த தகவலின்படி, சீனாவின் இந்த கட்டுப்பாடுகள் துணை அசெம்பிளிகள் மற்றும் இலகு ரக காந்தங்களின் இறக்குமதியை கடுமையாக பாதிக்கும். முன்னதாக சீனா விதித்திருந்த ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளைச் சமாளிக்கவே, இந்திய உற்பத்தியாளர்கள் இலகு ரக காந்தங்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தனர். தற்போது இந்தப் புதிய கட்டுப்பாடுகள் அந்த இடைக்காலத் தீர்வையும் முடக்குவதாக அமைந்துள்ளது" என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
அதேபோல், மூத்த தொழில் துறை நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் நோக்கம் மிக விரிவானது. இதன் விளைவுகளும் மிகவும் தீவிரமானவை. இது விண்வெளி, பாதுகாப்பு, ஆட்டோமொபைல்கள், நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் அல்லது தொழில்துறை இயந்திரங்கள் என ஒவ்வொரு துறையையும் பாதிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
புதிய வழிகாட்டுதல்களின்படி, காந்தங்கள் அடங்கிய எந்தவொரு பாகத்தின் மொத்த மதிப்பில் 0.1% க்கும் அதிகமாக காந்தம் இருந்தால், அதற்கு நவம்பர் 8ஆம் தேதி முதல் உள்ளூர் அதிகாரிகளிடம் ஏற்றுமதி ஒப்புதல் பெற வேண்டியது அவசியாகும். மின்சார வாகன மோட்டார்கள், வாகனத்தின் வேகத்தை கண்டறிதல் மற்றும் தானியங்கி கியர் மாற்றும் அமைப்புகளில் பயன்படுத்தப்படும் சுமார் 10-க்கும் மேற்பட்ட முக்கியமான கூறுகளில் அரிய பூமி காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த சூழலில், கனரக அரிய பூமி காந்தங்கள் கிடைக்காததால், சீனாவில் இருந்து முக்கியமான மின்னணு பாகங்களை (மாதிரி டிராக்ஷன் மோட்டார், ரோட்டரி அசெம்பிளி, பேட்டரி அமைப்புகள்) இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தற்போது நேரடியாக இந்த விளைவால் பாதிக்கப்படுகின்றன.
மற்றொரு தொழில் துறை நிர்வாகி, "ஒவ்வொரு நிறுவனமும் இதனால் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. குறுகிய காலத்தில் செயல்பாடுகளைப் பாதுகாக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்ய எங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டாலும், அது மட்டுமே தீர்வாக இருக்காது" என்று தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், "ஆட்டோமொபைல் உற்பத்தியில் ஆயிரக்கணக்கான பாகங்கள் தேவைப்படுகின்றன. இதன் மூலம் எந்தவொரு நிறுவனமாவது பாதிக்கப்பட்டாலோ அல்லது ஒரு பாகம் கிடைக்காமல் போனாலோ நாங்கள் தயாரிக்கும் தயாரிப்புகளால் என்ன பயன்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications