டெல்லி: சீனாவை சேர்ந்த வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனமான ஹையர் (HAIER) இந்தியாவில் ஒரு நிறுவனத்தோடு கூட்டணி அமைத்து தங்களுடைய பொருட்களை விற்பனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.
ஹையர் என்பது சீனாவை சேர்ந்த ஒரு பன்னாட்டு வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதன விற்பனை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்போது சீனாவில் பொருட்களை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இதனிடையே தங்களுடைய தொழிலை இந்தியாவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள ஹையர் 49 சதவீத பங்குகளை இந்திய நிறுவனத்திடம் வழங்கி இந்த பொருட்களை இந்தியாவிலேயே தயாரித்து விற்பனை செய்வது என திட்டமிட்டுள்ளது.

அண்மையில் கூட எம்ஜி மோட்டார் நிறுவனம் இதேபோல ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தோடு ஒப்பந்தம் செய்து தங்களுடைய மின்சார கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களுடைய பொருட்களை விற்பனை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு என பல்வேறு வரிகள் செலுத்த வேண்டி இருக்கிறது .
அதுவே மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரித்து விற்பனை செய்தால் பல்வேறு சலுகைகள் கிடைக்கும். ஆனால் அதற்கு இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் அதில் குறிப்பிட்ட அளவிலான பங்குகளை கொண்டிருக்க வேண்டும் என்பது நிபந்தனை.
அதுவும் ஹையர் நிறுவனம் சீனாவை சேர்ந்த நிறுவனமாக இருப்பதால் அத்தனை எளிதாக மத்திய அரசின் அனுமதியை பெற்று விட முடியாது. ஹையர் இந்தியா , எல்ஜி மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்ததாக வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் மூன்றாவது பெரிய நிறுவனமாக இருக்கிறது.
இந்த நிறுவனம் சிட்டி குழுமத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களோடு இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதால் தங்கள் வசம் இருக்கும் பங்குகளில் சுமார் 49 சதவீதம் பங்குகளை இந்திய நிறுவனத்திடம் வழங்க முடிவு செய்துள்ளது.
தங்களுடைய விண்ணப்பத்தை நடைமுறைப்படுத்தி வேகமாக மத்திய அரசின் அனுமதி பெற்று தரக்கூடிய இந்திய நிறுவனமாக இருக்க வேண்டும் என ஹையர் விரும்பதாக சொல்லப்படுகிறது. டாடா ,கோத்ரேஜ் ,ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் வேண்டாம் என ஹையர் நிறுவனம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் ஹையர் நிறுவனம் எல்ஜி ,சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களோடு போட்டியிட வேண்டி இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஹையர் நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டில் 6350 கோடி ரூபாய்க்கு தங்களுடைய பொருட்களை விற்பனை செய்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 17 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம் ஹையர் நிறுவனம் 154 கோடி லாபமாக பெற்றுள்ளது.
2022 ஆம் ஆண்டில் 63 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்தது ஓராண்டிலேயே லாபம் ஈட்டும் நிறுவனமாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் கிரேட்டர் நொய்டா, புனே ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் தங்களுடைய உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கும் ஹையர் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications