அமெரிக்க வரலாற்றில் பல சாதனைகள் படைக்கும் வரலாறு உடன் டொனால்டு டிரம்ப் அடுத்த சில மணிநேரத்தில் அதிபராக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் டிரம்ப் 2வது ஆட்சியில் உலகம் முழுவதும் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயம் என்னவென்றால் அமெரிக்கா - சீனா நட்புறவு குறித்த நிலைப்பாடு தான்.
இரு நாடுகளுக்கு மத்தியில் பல்வேறு பிரச்சனை இருந்தாலும் டிரம்ப் சீன அதிபருக்குப் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளையில் டிக்டாக் செயலி முடங்கிய பின்பு மீண்டும் இயங்க அனுமதி வழங்க டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது முக்கிய திருப்பு முனையாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சீன அரசு சார்பாக முக்கியமான பெரும் தலை டொனால்டு டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு வந்துள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் சார்பாகச் சீன துணை ஜனாதிபதி ஹான் ஜெங் (Han Zheng) டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு உள்ளார். டிரம்ப் வெளிநாட்டு தலைவர்களை இந்த பதவியேற்பு விழாவிற்கு அழைத்த பின்னர் சீன வெளியுறவு அமைச்சகம் ஹான் ஜெங் கலந்துகொள்ள உள்ளதாகத் தனது முடிவை அறிவித்தது. இந்த நிலையில் யார் இந்த ஹான் ஜெங் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.
ஹான் ஜெங் சீன அரசியலில் ஒரு முக்கிய நபர், சொல்லப்போனால் நம்பர் 2. ஜி ஜின்பிங் அடுத்தபடியாக அதிகப்படியான அரசியல் செல்வாக்கு மற்றும் மக்கள் செல்வாக்கு கொண்ட நபர் தான் ஹான் ஜெங். 2023 இல் ஹான் ஜெங் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார், இவருக்கு இந்த பதவியைக் கொடுத்ததே ஜி ஜின்பிங் தான்.
ஹான் ஜெங் முதல் முறையாக அதிபர் பதவியேற்று விழாவுக்கு கலந்துக்கொள்வில்லை இதற்கு முன்பு, இந்தோனேசிய அதிபர் பதவியேற்பு போன்ற பிற சர்வதேச நிகழ்வுகளில் சீன அரசு சார்பாக கலந்துகொண்டுள்ளார். கடந்த 2 வருடத்தில் சீன அரசின் சர்வதேச முகமாக மாறியுள்ளார் ஹான் ஜெங்.
அமெரிக்கா சீனா மத்தியில் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கு இடையே பதட்டங்கள் இருந்தபோதிலும், அமெரிக்காவுடன் நிலையான உறவை உருவாக்குவதில் ஆர்வமாகச் சீனா உறுதியாக உள்ளதைக் குறிக்கும் வகையில் கடைசி நேரத்தில் அழைப்பு விடுவிக்கப்பட்ட போதும் ஹான் ஜெங் கலந்துகொண்டு உள்ளார்.
1954 இல் ஷாங்காயில் பிறந்த ஹான் ஜெங், சீன கலாச்சாரப் புரட்சி காலகட்டத்தில் பண்ணை மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிந்தார். அரசியலில் நுழைவதற்கு முன்பு ஷாங்காய் கெமிக்கல் மற்றும் ரப்பர் தொழில் துறையில் முக்கிய பதவிகளை வகித்தார். இதன் பின்னர் அரசியலில் அடியெடுத்து வைத்து படிப்படியாக வளர்ந்து ஷாங்காய் மேயராகவும் பின்னர் கட்சியின் செயலாளராகவும் ஆனார் ஹான் ஜெங். இதே பதவிகளில் தான் முன்பு ஜி ஜின்பிங் வகித்தார்.
2017 இல், ஹான் ஜெங் சீனாவின் உயர்மட்ட அரசியல் நிர்வாகமான பொலிட்பீரோ குழுவில் சேர்ந்தார். பின்னர் அவர் துணை அதிபராக உயர்ந்தார். ஹான் ஜெங் அமெரிக்கத் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.டி.வான்ஸ் மற்றும் எலோன் மஸ்க் உள்ளிட்ட வணிகத் தலைவர்களைப் பல முறை சந்தித்துள்ளார்.


Click it and Unblock the Notifications