உலக பொருளாதார பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் சீனா, அமெரிக்காவை அடுத்த சில வருடங்களில் பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தை எட்ட வேண்டும் என்ற முக்கியமான இலக்குடன் இருக்கும் வேளையில் தற்போது பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு உள்ளது.
சீனாவில் தற்போது நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் விலைகள் ஒரு வருடத்திற்கு முன்பிருந்த அளவை விடவும் ஜூலை மாதத்தில் குறைந்ததால் சீனாவின் பொருளாதாரம் பணவாட்டம் அதாவது Deflation-க்கு இழுத்து சென்றுள்ளது.

நுகர்வோர் விலை பணவீக்கம் (CPI), கடந்த ஆண்டை விடவும் இந்த ஜூலை மாதம் 0.3% குறைந்துள்ளது, இது பிப்ரவரி 2021 க்குப் பிறகு பதிவான பெரும் சரிவாகும். இதோடு உற்பத்தியாளர் விலைகள் தொடர்ந்து 10வது மாதமாக வீழ்ச்சியடைந்து 2022 ஆம் ஆண்டை விடவும் ஜூலை மாதம் 4.4 சதவீதமாக குறைந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஜூலை மாதத்தில் நுகர்வோர் விலை குறியீடு குறைந்ததால், சீனாவின் பொருளாதாரம் பணவாட்டத்திற்கு சென்றுள்ளது. இது சர்வதேச முதலீட்டாளர்களை பயமுறுத்தியுள்ளது, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பாவில் இருக்கும் முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் அனைத்தும் சீன முதலீடுகள் குறித்து எச்சரித்துள்ளது.
பணவீக்கத்திற்கு எதிரானது தான இந்த பணவாட்டம் என்பது தெரியும், ஆனால் இதனால் என்னாகும். பொதுவாக பணவீக்கம் என்றால் பொருட்கள் விலை உயரும், பணவாட்டம் என்றால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை குறைவதை குறிக்கிறது.
இத்தகைய பணவாட்ட நிலை பல காரணத்திற்காக உருவாகும், உதாரணமாக மக்களின் நுகர்வு அதாவது வாங்கும் அல்லது செலவு செய்வது குறைவதாலும் இது நடக்கும். பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை குறைவது நல்ல விஷயமாக தெரியவந்தாலும் இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறக்க கூடாது.
பணவாட்டம் நிலையின் அடிப்படை டிமாண்ட் குறைவது தான். இதனால் தொழிற்சாலைகளின் உற்பத்தி குறையும், வேலைவாய்ப்பு குறையும், பணிநீக்கம் அதிகரிக்கும், இதனால் நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் இருப்பை விற்க அதிகப்படியான தள்ளுபடிகள் அளிக்கும், இது நிறுவனங்களுக்கு பெரும் இழப்பை கொடுக்கும்.
சீனாவில் 2020 ஆம் ஆண்டின் இறுதி மற்றும் 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் குறுகிய காலத்திற்கு பணவாட்ட நிலை இருந்தது. இதனால் சீனாவில் அதிகமாக சாப்பிடப்படும் இறைச்சியான பன்றி இறைச்சியின் விலை பெரிய அளவில் சரிந்தது.
சீன பொருளாதாரத்தில் சுமார் 25 சதவீத பங்கீட்டை அந்நாட்டின் ரியல் எஸ்டேட் துறை கொண்டுள்ள நிலையில், தற்போது சீன ரியல் எஸ்டேட் மோசமான நிலையில் இருக்கும் காரணத்தால் பெரும் பாதிப்பை அந்நாட்டின் பொருளாதாரம் எதிர்கொண்டு உள்ளது. இதன் மூலம் சீனா மட்டும் அல்லாமல் சர்வதேச பொருளாதாரமும் பாதிக்கும்.


Click it and Unblock the Notifications