சீனா அரசு ஏற்கனவே டெக் துறையில் முன்னோடியாக இருந்தாலும், பல துறையில் புதிய கனவுக்களுக்கு வித்திட்டு உள்ளது. இதற்கு பல லட்சம் டெக் நிபுணர்களும், அறிவியல் வல்லுனர்களும் தேவை என்பதால், அமெரிக்கா மூடிய கதவை சீனா திறந்துள்ளது.
சீனா, உலகளவில் இருக்கும் திறமையான ஊழியர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் ஹெச்1பி விசாவுக்கு இணையாக புதிதாக 'K விசா' என்னும் புதிய விசாவை வரும் அக்டோபர் 1, 2025 முதல் அறிமுகப்படுத்த உள்ளது, இது இந்திய தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம் என நம்பப்படுகிறது.

அமெரிக்காவின் H-1B விசா கட்டண உயர்வு, இந்திய ஐடி நிறுவனங்களை புதிய சந்தைகளை நோக்கி திருப்பியுள்ள நிலையில், சீனாவின் இந்த விசா அறிவிப்பு, கிழக்கு ஆசியாவில் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதார சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு ஒரு மாற்று வழியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த K விசா, இளம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியல் மற்றும் கணித (STEM) துறை தொழிலாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் இந்திய வல்லுனர்களுக்கு சீனாவில் வேலைவாய்ப்புகளை திட்டி தூக்க முடியும்.
K விசாவும் - இந்திய ஐடி நிறுவனங்களும்: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான TCS, இன்போசிஸ் போன்றவை அமெரிக்காவில் 13,396 H-1B விசாக்களை சார்ந்து இயங்கி வருகிறது. இப்படிியிருக்கும் நிலையில் ஒவ்வொரு விசாவுக்கும் 1 லட்சம் டாலர் செலுத்த வேண்டுமெனில் ஐடி நிறுவனங்களுக்கு நிதி ரீதியாக பெரிய பாதிப்பு ஏற்படுத்தும்.
இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் மாற்று சந்தைகளை ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. சீனாவின் K விசா, அந்நாட்டில் இருக்கும் நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப் இல்லாமலும் STEM தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. இது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு சீனாவில் புதிய அலுவலகங்களை அமைக்க அல்லது ஏற்கனவே உள்ளவற்றை விரிவாக்க உதவும்.
சீனாவின் வளர்ந்து வரும் AI மற்றும் 5G துறைகளில் இந்திய ஐடி ஊழியர்கள் பணியாற்ற பெரும் வாய்ப்பை தேடி தரும். இதேவேளையில் சீனாவில் வணிகம் செய்வது இந்திய நிறுவனங்களுக்கு பல அபாயங்களை உள்ளடக்கியுள்ளது. சீனாவில் உயர்ந்த இயக்க செலவுகள், ஒழுங்குமுறை தடைகள் மற்றும் அரசியல் பதற்றங்கள் ஆகியவை இந்திய நிறுவனங்களால் அமெரிக்காவை மொத்தமாக கைகழுவிவிட்டு முழுமையாக சீனாவுக்கு இடமாற்றம் செய்ய முடியாது.
இந்திய நிறுவனங்கள், அமெரிக்க சந்தையை தக்கவைத்து, சீனாவில் மற்றும் ஆசிய-பசிபிக் பகுதிகளில் படிப்படியாக விரிவாக்கம் செய்யும் ஒரு ஹைப்ரிட் மாடலை இந்த கே விசா மூலம் பின்பற்றலாம். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் பல கேள்விகளை எழுப்புகிறது.
சீனாவின் இந்த கே விசா இந்திய ஐடி நிறுவனங்களும், இந்திய டெக் ஊழியர்களுக்கும் எந்த அளவுக்கு பயன்படுகிறது என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications