இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ அடுத்தடுத்து 2 காலாண்டுகளுக்கு லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து அவர்களின் முதலீட்டின் மீது அதிகப்படியான நம்பிக்கையைக் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் சீனாவின் மிகப்பெரிய டிஜிட்டல் சேவை நிறுவனமான அலிபாபா குழுமத்தின் ஆண்ட் குரூப் புதன்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் பிளாக் டீல் வாயிலாக Zomato-வின் 3.4% பங்குகளைச் சுமார் 3,290 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு மொத்தமாக வெளியேற உள்ளதாகத் தெரிகிறது.

Zomato நிறுவனத்தின் ஐபிஓ பின்பு முதலீட்டாளர்கள் போட்ட பணத்தையாவது திரும்ப எடுப்போமா என்ற கவலையில் இருந்த நிலையில் அடுத்தடுத்து 2 காலாண்டுகளில் முதலீட்டாளர்கள் மனம் குளிர்விக்கும் வகையில் லாபத்தைப் பதிவு செய்த ஓரே காரணத்தால் சோமேட்டோ பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் மட்டுமே சுமார் 90% உயர்ந்தது.
இந்த உயர்வைப் பணமாக்கவும், இந்தியாவில் நியூ ஏஜ் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் லாப நிலையை அடைய எதிர்கொள்ளும் பிரச்சனைகள், முதலீட்டுச் சந்தையில் இருக்கும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் சீனா-வின் ஆண்ட் குரூப் சோமேட்டோ பங்குகளை மொத்தமாக விற்பனை செய்துவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளது.

BofA Securities நிறுவனம் வெளியிட்டுள்ள டேர்ம் ஷீட் தகவல் படி, சீனாவின் ஆண்ட் குரூப்பின் கிளை நிறுவனமான அலிபே சிங்கப்பூர் ஹோல்டிங்ஸ் ஒரு பங்கிற்கு 111.28 ரூபாய் என்ற சலுகை விலையில் 296.1 மில்லியன் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது. இந்த ஆஃபர் விலை செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் Zomato பங்குகளின் இறுதி விலையில் இருந்து சுமார் 2.2% தள்ளுபடி விலையாகும்.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சோமேட்டோ பங்குகள் 0.5 சதவீதம் உயர்ந்து 113.80 ரூபாய் அளவில் முடிந்தது. இதேபோல் செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவில் அலிபே சிங்கப்பூர் ஹோல்டிங்ஸ் நிறுவனம் சோமேட்டோ-வில் சுமார் 3.44 சதவீத பங்குகளை வைத்திருந்தது. இதேபோல் ஆண்ட் குரூப்பின் மற்றொரு கிளை நிறுவனமான Antfin Singapore Holdings 6.39 சதவீத பங்குகளை வைத்திருந்தது.
இன்றைய வர்த்தகத்தில் சோமேட்டோ பங்குகள் 4.00 சதவீதம் அதிகரித்து 118.30 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 2018 ஆம் ஆண்டு அலிபே சுமார் 360 மில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்து சுமார் 777 மில்லியன் பங்குகளை வாங்கியது, இதில் சோமேட்டோ ஐபிஓ வெளியிடும் போது சுமார் 218 மில்லியன் பங்குகளை விற்பனை செய்தது.


Click it and Unblock the Notifications