அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2ம் தேதியன்று, இந்தியா மற்றும் சீனா உள்பட சுமார் 150 நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். குறிப்பாக சீனா பொருட்களுக்கு 54 சதவீதம் வரி விதித்தார். இதனையடுத்து வாரம் சீனா அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டு பொருட்களுக்கு 34 சதவீதம் வரி விதித்தது. சீனாவின் வரி விதிப்பு டிரம்பின் கோபத்தை மேலும் அதிகரித்தது.
இதனையடுத்து சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில தினங்களுக்கு முன் டிரம்ப் நிர்வாகம், சீன பொருட்களுக்கு 104 சதவீதம் வரி விதித்தது. மேலும் இந்த வரி உடனடியாக அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு அறிவித்தது. ஆனால் கொஞ்சமும் அசராத சீனாவோ, அமெரிக்க பொருட்களுக்கு மீதான வரியை 84 சதவீதமாக உயர்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று சீனாவை தவிர இந்தியா உள்பட பிற நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக நேற்று டிரம்ப் அறிவித்தார். மேலும் சீன பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக உயர்த்துவதாகவும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
டிரம்ப் முதலில் சீன பொருட்களுக்கான வரியை 54 சதவீதமாக உயர்த்தியபோதே, அமெரிக்க நிறுவனங்கள் சீன நிறுவனங்களுக்கு ஆர்டரை கொடுப்பதை நிறுத்தின. வரியால் பொருளின் விலை மிகவும் அதிகரிக்கும் என்பதை இதற்கு காரணம்.
குறிப்பாக இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் ஆர்டர் சீன நிறுவனங்களுக்கு கிடைக்காமல் போனது. பொதுவாக அமெரிக்க நிறுவனங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆர்டரை ஏப்ரல் மாதத்திலே கொடுத்து விடும். அமெரிக்க ஆர்டர் கிடைக்காததால் சீன நிறுவனங்கள் விழிபிதுங்கின. இந்நிலையில், சீன பொருட்களுக்கான வரியை டிரம்ப் 125 சதவீதமாக உயர்த்தி இருப்பது சீன நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிக வரியால் அமெரிக்க வர்த்தகம் கை விட்டு போவதை உணர்ந்த சீன நிறுவனங்கள் குறிப்பாக சீன எலக்ட்ரானிக் உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது தங்களது வர்த்தகத்துக்கு இந்திய சந்தையை மலைபோல் நம்பியுள்ளன.
தற்போதைய சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி கொண்ட இந்திய நிறுவனங்கள், புதிய கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்வது தொடர்பாக சீன எலக்ட்ரானிக் உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளன.
ஏற்கனவே அமெரிக்க வர்த்தகம் கையை விட்டு போகும் நிலையில், இந்திய ஆர்டர்களை விட்டு விட்டால் நம் பாடு திண்டாட்டம்தான் என்பதை உணர்ந்த சீன எலக்ட்ரானிக் உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் விலையை 5 சதவீதம் வரை குறைக்க முன்வந்துள்ளன. சீனா விலையை குறைக்க முன்வந்துள்ளதால், கொள்முதல் செலவினம் 2 முதல் 3 சதவீதம் மிச்சமாகும். எனவே இது குறிப்பிடத்தக்க சலுகை என்று குளிர்சாதன பெட்டி, டிவி மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
சந்தையில் தேவையில் தூண்டுவதற்காக, வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் உற்பத்தி செலவு குறைவின் பலனை நுகர்வோருக்கு இந்திய உற்பத்தியாளர்கள வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020ம் ஆண்டில் எல்லை பிரச்சினை ஏற்பட்டது முதல் இந்தியா-சீனா இடையேயான உறவு சுமூகமாக இல்லை.
தற்போது அமெரிக்காவுடன் சீனா வரி போரில் ஈடுபட்டுள்ளதால், சீன நிறுவனங்களுக்கு இந்திய சந்தைகளை நாடுவதை தவிர வேறு வழியில்லை. எனவே இந்திய நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் மூலப்பொருட்களை வாங்குவதற்கு இது சரியான தருணமாக இது கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications