சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக மோதல் காரணமாக சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதியாளர்களின் உதவியை நாடியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீத இறக்குமதி வரியை விதித்திருக்கிறார். அதற்கு போட்டியாக சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு நடவடிக்கைகளால் சீனாவை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்து சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் தங்களின் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு இந்திய நிறுவனங்கள் வாயிலாக பொருட்களை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளன. இதற்காக இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளன. இந்திய ஏற்றுமதி கூட்டமைப்புக்கான தலைவர் அஜய் சகாய் சீனாவில் நடைபெற்று வரும் வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்டாராம். அப்போது பல்வேறு சீன நிறுவனங்களும் அமெரிக்காவில் இருக்கும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்களுடைய தயாரிப்புகளை கொண்டு சேர்ப்பதற்கு இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சீன பொருட்களை வாங்கி அமெரிக்காவிற்கு அனுப்பி வைப்பதற்காக இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களுக்கு சீன நிறுவனங்கள் கமிஷன் வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். தற்போதைய சூழலில் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போதைக்கு 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது ஜூலை மாதத்திற்கு பிறகு இது 26 சதவீதமாக உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அதிக தொகையை செலவிட வேண்டும் என்பதால் தயக்கம் காட்டுகின்றன. எனவே தான் சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவிற்கு தங்களுடைய பொருட்களை அனுப்பி இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முன்வந்திருக்கின்றன.
மின்னணு சாதனங்கள் ,வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் தான் பெரிய அளவில் இந்திய ஏற்றுமதியாளர்களை தொடர்பு கொண்டு உதவி கோரி இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். ஜலந்தரை சேர்ந்த பல்வேறு கருவிகளை உருவாக்கும் நிறுவனம் சீனாவை சேர்ந்த ஐந்து நிறுவனங்கள் தங்களை தொடர்பு கொண்டு தங்களுடைய பிராண்ட் பொருட்களை இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும்படி கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஏற்கனவே அமெரிக்கா அரசுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது. இந்த வர்த்தக பேச்சு வார்த்தையின் மூலம் இந்திய பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டால் இந்தியாவிற்கான ஏற்றுமதி வாய்ப்பு என்பது மேலும் அதிகரிக்கும். அதே வேளையில் சீன நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழந்து விட கூடாது என்பதற்காக இந்திய நிறுவனங்களுடன் கூட்டு நிறுவனங்களை உருவாக்கி தங்களின் ஆலைகளை இந்தியாவில் நிறுவவும் தயார் என கூறி வருகின்றன.


Click it and Unblock the Notifications