டெல்லி: சீனாவை சேர்ந்த விவோ, ஒன்பிளஸ், ஹை சென்ஸ், ஹையர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் தங்கள் சாதனங்களுக்கான முக்கிய பாகங்களை இந்தியாவிலேயே கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என வரும் போது பெரும்பாலான முக்கிய பாகங்களுக்கு சீனாவை தான் சார்ந்திருக்க வேண்டி இருக்கிறது. அதாவது சீன நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்து தான் நாம் ஸ்மார்ட்போன் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி செய்கிறோம்.

சீனாவை சேர்ந்த விவோ, ஒன் பிளஸ், ஓப்போ, ஹை சென்ஸ், ஹையர் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் பிற சாதனங்களை உற்பத்தி செய்தாலும் அவற்றுக்கான முக்கிய பாகங்களை சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்கின்றன.
இந்த நிலையில் மத்திய அரசு சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதால் இந்த முக்கிய பாகங்களை இந்தியாவிலேயே கொள்முதல் செய்து பயன்படுத்துவதற்கு இந்த நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. இதற்காக இந்தியாவிலேயே இந்த பொருள்களை விநியோகம் செய்வதற்காக நிறுவனங்களை தேடி வருவது தெரியவந்துள்ளது.
ஹையர் இந்தியா நிறுவனம் புனேவில் தங்களுடைய குளிர்சாதன பெட்டி மற்றும் தொலைக்காட்சிக்கு தேவையான முக்கிய பாகங்களை தயாரிப்பதற்கு என ஆலையை நிறுவியுள்ளது. குறிப்பாக சர்க்யூட் போர்டுகளை இந்தியாவிலேயே தயாரிப்பதற்காக ஹையர் நிறுவனம் 300 கோடி முதலீடு செய்ய இருப்பது தெரியவந்துள்ளது.
அதேபோல தொலைக்காட்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் ஹை சென்ஸ் நிறுவனம் இந்தியாவில் குறிப்பிட்ட சில நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து தங்களுக்கு தேவையான முக்கிய உபகரணங்களை கொள்முதல் செய்ய இருக்கிறது.
விவோ 30க்கும் அதிகமான விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறது. இதன் மூலம் தங்களுடைய ஸ்மார்ட் போனுக்கான முக்கிய பாகங்களை இந்தியாவிலேயே கொள்முதல் பயன்படுத்த இருக்கிறது. ஓப்போ, ஒன்பிளஸ் நிறுவனங்களும் இதே போன்ற ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளன.
சீனாவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பாகங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசின் பிஐஎஸ் தர சான்றிதழ் பெறுவது அவசியம். சீன நிறுவனங்களுக்கு அத்தனை எளிதாக பிஐஎஸ் தரச் சான்று வழங்கப்படுவது கிடையாது. மேலும் சீன நிறுவனங்கள் நேரடியாக இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு செய்வதற்கும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதன் காரணமாகவே சீன நிறுவனங்கள் இந்தியாவிலேயே முக்கியமான எலக்ட்ரானிக்ஸ் பாகங்களை கொள்முதல் செய்து ஸ்மார்ட் போன் தயாரிக்க முன் வந்திருக்கின்றன.
அந்த வகையில் டாடா எலக்ட்ரானிக்ஸ், டிக்ஸன் டெக்னாலஜி, ஆம்பர் என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் பல்வேறு சீன நிறுவனங்களோடு ஸ்மார்ட் கருவிகளுக்கான பாகங்களை விநியோகம் செய்வதற்கு கோடிக்கணக்கிலான மதிப்பில் ஒப்பந்தங்களை போட்டு இருக்கின்றன.
தற்போதைய சூழ்நிலை சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் தங்களுடைய ஸ்மார்ட் ஃபோன்களை தயாரிப்பதற்கான பாகங்களை இந்தியாவில் 15 சதவீதம் வரை இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களிடமிருந்தே கொள்முதல் செய்கின்றன அடுத்து இரண்டு ஆண்டுகளில் இது 30 சதவீதமாக உயரும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications