டெல்லி: சீனாவை சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி இந்தியாவில் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரி இருந்தது. ஆனால் அரசின் மின்சார வாகன கொள்கைக்கு உட்பட்டு அது இல்லாததால் அரசு அனுமதி வழங்கவில்லை. எனவே பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலையை நிறுவும் முடிவை கைவிட்டு விட்டது.
உலக அளவில் மின்சார கார்களுக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா இருக்கிறது. எனவே இந்தியாவில் மின்சார கார்களை விற்பனை செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் வெளிநாட்டில் இருந்து கார்களை இறக்குமதி செய்யும் போது அதிக வரி செலுத்த வேண்டி இருக்கிறது.

மத்திய அரசின் கொள்கைப்படி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலையை நிறுவினால் வரி சலுகை கிடைக்கும். எனவே பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் ஆலையை நிறுவ முடிவு செய்திருந்தது. இதற்காக 1 பில்லியன் டாலரை இந்தியாவில் முதலீடு செய்வதாக தெரிவித்தது.
ஆனால் அரசின் விதிகளுக்கு உட்பட்டு இல்லாதது மற்றும் சீன நிறுவனமாக இருப்பது உள்ளிட்ட காரணங்களால் பிஒய்டியின் விண்ணப்பத்தை அரசு ஏற்கவில்லை என தெரிகிறது. இந்த சூழலில் பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் ஆலையை நிறுவும் முடிவினை கைவிட்டு விட்டது. இருந்தாலும் இந்தியா மிகப்பெரிய வாகன உற்பத்திக்கான சந்தையாக இருப்பதால் சீனாவில் தயாரித்து இந்தியாவில் இறக்குமதி செய்து வாகனங்களை விற்பனை செய்வது என்ற முடிவுக்கு வந்துள்ளது.
பிஒய்டி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜிவ் சௌகன் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை உறுதி செய்துள்ளார். அண்மையில் தான் இந்த நிறுவனம் தங்களுடைய ஈமேக்ஸ் 7 என்ற புதிய வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த நிகழ்ச்சியின் போது பேசிய ராஜிவ் சௌகன் தங்கள் நிறுவனம் இந்தியாவில் கார் உற்பத்தி ஆலையை நிறுவப் போவதில்லை என கூறியுள்ளார்.
தற்போது இறக்குமதி வரி அதிகமாக இருந்தாலும், பிஒய்டி நிறுவனம் அதனை சுமக்க தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். சீனாவில் உற்பத்தி இந்தியாவில் இறக்குமதி என்ற கொள்கையை பின்பற்றப் போவதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் 2500 வாகனங்களை விற்பனை செய்துள்ளது நடப்பாண்டில் அது 3500 ஆக அதிகரிக்கும் என அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் அதிக அளவிலான மின்சார வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக சீனாவின் பிஒய்டி இருக்கிறது.
எதிர்காலத்தில் வேறு நிறுவனங்களோடு இணைந்து இந்தியாவில் செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பிஓய்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவின் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தோடு இணைந்து மின்சார வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications