அமெரிக்காவில் டிக்-டாக் செயலியின் எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கும் வேளையில், டிரம்ப் ஆட்சிக்கு வந்த உடனே 90 நாள் கெடு கொடுத்து அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்ய தகுந்த நிறுவனத்தை தேர்வு செய்ய உத்தரவிட்டார். இதற்கான பணிகள் நடந்துக்கொண்டு இருக்கும் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமையிலான அரசு, டிக்-டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்ய அனுமதி வழங்க மறுத்துள்ளது. இதன் காரணமாக, டிக்-டாக் விவகாரம் மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது.
அமெரிக்க நிறுவனத்திற்கு டிக்-டாக் செயலியை விற்பனை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சீன அரசு அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. மாறாக, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கொள்கை தொடர்பான ஒப்பந்தத்தில் ஈடுபட அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா முன்வந்துள்ளது.

இதனால் டிக்-டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முயற்சிக்கும் தரப்பினருக்கும் சீனாவின் இந்த நிலைப்பாடு பெரும் சவாலாக மாறியுள்ளது. டிக்-டாக் செயலி தற்போது சீன நிறுவனமான பையிட்டான்ஸ் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இது அமெரிக்க அரசு மற்றும் நீதிமன்றத்தில் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. இதனால் இதை தடை செய்யும் உத்தரவுக்கு நீதிமன்றமும் பச்சை கொடி காட்டியது.
இந்த நிலையில் டிக்டாக்-ன் அமெரிக்க செயல்பாடுகள், வர்த்தகத்தின் 50 சதவீத பங்கை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கப்பட்டு, அமெரிக்க மக்களின் தரவுகளை அமெரிக்க மண்ணிலேயே வைத்துக்கொண்டு இயங்க அனுமதி கொடுக்கப்பட்டது. இந்த 50 சதவீத பங்குகளை வாங்கும் அமெரிக்க நிறுவனம் யார் என்பதை தான் தற்போது தீர்மானிக்கப்பட்டு வருகிறது. டிக்-டாக் செயலியை வாங்க பல முக்கியமான நபர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
அமெரிக்க அரசு ஈக்விட்டி ஃபண்ட் மூலம் டிக்-டாக் செயலியை வாங்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. எலான் மஸ்க், யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட், ஆரக்கிள் உள்ளிட்ட பலரும் டிக்-டாக் செயலியை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் டிக்-டாக் செயலியை வாங்க விரும்பிய மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் மீண்டும் இதை வாங்க ஆர்வம் காட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications