சீனா: சீனாவை சேர்ந்த 35 வயது இளைஞர், திருமணத்திற்கான பெண் பார்க்கும் படலத்தில் தனக்கு கிடைத்த அனுபவத்தால் திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். சீனாவின் புகழ்பெற்ற சவுத் சீனா மார்னிங் போஸ்ட் இதழில் வெளியாகியுள்ள இந்த செய்தி தான் சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஸீஜியங் மாகாணத்தின் ஹாங்ஸூ பகுதியை சேர்ந்த 35 வயதான இளைஞர் வாங். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதற்கான பெண் பார்க்கும் படலம் நடந்து வந்தது. அப்படி கடந்த வாரம் ஒரு பெண்ணை வாங் சந்தித்தி பேசியுள்ளார்.

தனது சம்பளம், வாழ்க்கை நிலை ஆகியவை குறித்து வாங் அந்த பெண்ணிடம் எடுத்துரைத்துள்ளார். அப்போது அவரிடம் நன்றாக பேசிய அந்த பெண் , அன்று மாலை அவருக்கு ஒரு செலவு பட்டியலை அனுப்பி வைத்துள்ளார்.
இருவருக்கும் திருமணம் நடந்த பிறகு எதிர்காலத்தில் என்னென்ன செலவுகள் ஏற்படக்கூடும் என்பது குறித்து ஒரு பட்டியலை அந்த வாங்கிற்கு அனுப்பியுள்ளார்.
குடும்பத்திற்கு சாதாரணமாக ஒரு நாளைக்கு ஆகும் செலவினங்கள் என்ற பெயரில் அந்தப் பெண் அனுப்பி வைத்த செலவினங்கள் பட்டியலை பார்த்து வாங் அதிர்ச்சி அடைந்துள்ளார். மளிகை சாமான், போக்குவரத்து செலவு மற்றும் கேஜெட்டுகள். துணிமணிகள் என ஒரு ஒவ்வொரு மாதத்திற்கும் 9,900 யுவான் (ரூபாயில் 1.15 லட்சம் ) செலவாகும் என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திருமணத்துக்குப் பிறகு செலவினங்களால் தங்களுக்குள் பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதால் இந்த பட்டியலை அனுப்பி வைப்பதாக அந்த பெண் கூறியதாகவும், ஆண்டுக்கு 2 லட்சம் யுவான் (ரூபாயில் 24 லட்சம்) வாங்கும் அளவுக்கு வேறு ஒரு பணிக்கு செல்லுமாறும் அந்தப் பெண் வலியுறுத்தியதாக வாங் தெரிவித்துள்ளார்.
பட்டியலையும் செலவினங்களையும் பார்த்து தான் அதிர்ச்சி அடைந்து விட்டதாகவும் சாதாரண ஒரு வாழ்க்கையை வாழ்வதையே தான் விரும்புவதாகவும் கூறி திருமணம் செய்யும் முடிவை கைவிட்டதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். வாங்கிற்கும் திருமணத்திற்கும் ஏழாம் பொருத்தம் போல, ஏற்கனவே இவருக்கு கடந்த ஆண்டில் ஒரு பெண் பார்க்கப்பட்டுள்ளது.
அப்போது அந்த பெண், திருமணத்திற்கு பிறகு இருவரும் வெவ்வேறு அறைகளில்தான் உறங்க வேண்டும் என நிபந்தனை விதித்ததாகவும் அதனால் அந்த பெண்ணை வேண்டாம் என முடிவு செய்ததாகவும் வாங் கூறியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications