சென்னை: சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ, இந்தியாவின் மிகப்பெரிய செல்போன் உற்பத்தி தொழிற்சாலையை அடுத்த மாதம் திறக்க உள்ளது. இந்த புதிய தொழிற்சாலை வருடத்திற்கு 120 மில்லியன் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் திறன் கொண்டது.
இத்தொழிற்சாலையை அமைப்பதற்கு 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை முதலீடு செய்துள்ளதாக விவோ தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தொழிற்சாலையைச் சிறப்பாக இயக்கவும், அரசு கட்டுப்பாடுகளிலிருந்து தப்பிக்கவும், உற்பத்தி பணிகளை மேற்கொள்ள இந்தியாவைச் சேர்ந்த ஒரு கூட்டு நிறுவனத்தை (JV) விவோ தீவிரமாகத் தேடி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக விவோ தற்போது டாடா குழுமம், முருகப்பா குழுமம் மற்றும் இந்திய ஒப்பந்த உற்பத்தியாளரான டிக்சன் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், விவோ தனது புதிய தொழிற்சாலையை அதிகப்படியான விலைக்கு மதிப்பீடு செய்யப்படும் காரணத்தால் கூட்டணி உருவாக்குவதில் பெரும் தாமதம் ஏற்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விவோ நிறுவனம் ஏற்கனவே ஒரு தொழிற்சாலையைக் குத்தகைக்குப் பெற்றிருந்தது, இது வருடத்திற்கு 40 மில்லியன் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் திறன் கொண்ட உற்பத்தி தளமாகும். தற்போது அந்த ஆலையை மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவான பாக்வதி என்டர்பிரைசஸ் எடுத்துக்கொண்டுள்ளது.
விவோ நிறுவனத்தின் புதிய ஆலை, கிரேட்டர் நொய்டா பகுதியில் 170 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இது, 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாட்டின் மிகப்பெரிய செல்போன் உற்பத்தி ஆலை சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு நிகரானது. சாம்சங் தொழிற்சாலை வருடத்திற்கு 120 மில்லியன் யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.


Click it and Unblock the Notifications