புகைப்பிடிக்கும் பழக்கம் உடலுக்கு பெரிய கேடு விளைவிக்கும் என எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அந்த பழக்கம் மக்களிடையே குறையவே இல்லை. புகைபிடிப்பவருக்கு மட்டுமல்ல அவருடன் இருப்பவர்களுக்கும் இது பிரச்சினையை ஏற்படுத்த கூடியது.
இந்த சூழலில் தான் மத்திய அரசு புகையிலை பொருட்களுக்கான கலால் வரி திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. அண்மையில் முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் தான் மத்திய அரசு இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. புகையிலைப் பொருட்கள் மீதான கலால் வரி திருத்த மசோதா சட்டமாகி நடைமுறைக்கு வரும்போது சிகரெட் உட்பட பிற புகையிலை பொருட்களின் விலைகள் இதுவரை இல்லாத அளவிற்கு உயரும்.

குறிப்பாக தற்போது ஒரு சிகரெட் 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்போது ஒரு சிகரத்தின் விலை 72 ரூபாயாக உயர்ந்து விடுமாம். வரும் ஜனவரி மாதத்திலேயே இந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து புகையிலை பொருட்களின் விலைகளை உயர்த்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்தியாவில் புகை பிடிக்கும் பழக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது . குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த புகை பிடிக்கும் பழக்கம் அதிகமாக காணப்படுகிறது .
உடல் நலத்திற்கு கேடு என விளம்பரம் செய்தாலும் அந்த பழக்கத்தை பெரும்பாலானவர்கள் கைவிடாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் மத்திய அரசு புகையிலைப் பொருட்களின் விலையை உயர்த்தினால் அவற்றை வாங்கி பயன்படுத்தும் போக்கு குறையும் என முடிவு செய்தது. இதற்காகவே மத்திய கலால் வரி திருத்த மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்றியது .
மத்திய நிதித்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் புகையிலை பொருட்கள் மீதான வரி உயர்கிறது. எனவே அவற்றின் விற்பனை விலையும் உயரும். சிகரெட், சுருட்டு , ஹூக்கா புகையிலை, மெல்லும் புகையிலை , வாசனைப் புகையிலை உள்ளிட்ட புகையிலை தயாரிப்புகள் மீதான கலால் வரி உயர்த்தப்படுகிறது.
இவற்றின் விலை உயரும் போது மக்கள் தானாகவே அவற்றை பிடிக்கும் பழக்கத்தை படிப்படியாக கைவிட்டு விடுவார்கள் என சொல்லப்படுகிறது. ஆனால் அதே வேளையில் ஈ சிகரேட் போன்ற மாற்று வழிகளை சிலர் நாடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன . 1000 சிகரெட் கொண்ட ஒரு பாக்கெட்டிற்கான வரி 200 ரூபாய் முதல் 735 ரூபாய் வரை உள்ளது. இது 2,700 ரூபாய் முதல் 11,000 ரூபாய் வரை உயர போகிறது. மெல்லும் புகையிலைக்கான வரி 25%இல் இருந்து 100%ஆக உயர உள்ளது, ஹூக்கா புகையிலைக்கான வரி 25%இல் இருந்து 40%ஆக உயர போகிறது.


Click it and Unblock the Notifications