இந்திய மக்கள் அனைவகும் நாளை பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் அறிக்கை தாக்கலை எதிர்நோக்கி காத்திருக்கும் வேளையில், நாளை முதல் முக்கியமான மாற்றம் நடைமுறைக்கு வர உள்ளது. பிப்.1 முதல் நாடு முழுவதும் சிகரெட் விலை உயரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சிகரெட்டுக்கு பெரிய அளவில் கலால் வரி உயர்த்தப்பட்ட நிலையில் நாளை முதல் இது நடைமுறைக்கு வருகிறது. புதிய முறை நடைமுறைக்கு வருவது மூலம் சிகரெட் நீளத்தின் அடிப்படையில் வரி விதிக்கப்படும் புதிய முறை அமலுக்கு வருகிறது. மேலும் பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்களுக்கும் சுகாதார செஸ் விதிக்கப்படுகிறது.

புதிய வரி முறையின்படி, சிகரெட்டுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி-க்கு மேல் கூடுதல் கலால் வரி விதிக்கப்படும். இதன் மூலம் சிகரெட் நீளத்தின் அடிப்படையில் வரி வேறுபடும்.
ஒரு சிகரெட்டுக்கு எவ்வளவு உயரும்
குறுகிய, பில்டர் இல்லாத சிகரெட் (65 மிமீ நீளம் வரை) வரி மூலம் ரூ.2.05 விலை உயரும்.
குறுகிய பில்டர் உள்ள குறுகிய சிகரெட் ரூ.2.10 வரை விலை உயரும்.
நடுத்தர நீளம் (65-70 மிமீ) ரூ.3.6 முதல் ரூ.4 வரை விலை உயரும்.
நீண்ட, பிரீமியம் சிகரெட் (70-75 மிமீ) ரூ.5.4 வரை விலை உயரும்.
வழக்கத்திற்கு மாறான வடிவமைப்பு கொண்ட சிகரெட்டுகளுக்கு மட்டுமே ஒரு குச்சிக்கு ரூ.8.50 வரி விதிக்கப்படும். இதன் மூலம் நாளை முதல் சிகரெட்-க்கு 2 ரூபாய் முதல் 8.50 ரூபாய் வரையில் உயர உள்ளது.
4 பிராண்ட் சிகரெட்
இதனால் கோல்ட் ஃப்ளேக் பிரீமியம், ரெட் அண்ட் வைட் கிங் சைஸ், கிளாசிக், மார்ல்போரோ, நேவி கட், ஐஸ் பர்ஸ்ட் போன்ற நீண்ட சிகரெட்டுகள் அதிகப்படியான விலை உயர்வை எதிர்கொள்ளும்.
புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்களுக்கு புதிய விதிகளும் அமலுக்கு வருகின்றன. சுருட்டு புகையிலை, கைனி, ஜர்தா, குட்கா போன்றவற்றுக்கு ரீடைல் விலை அடிப்படையில் ஜிஎஸ்டி கணக்கிடப்படும். இது நாள் வரையில் உற்பத்தி செலவு அடிப்படையில் கணக்கிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் புகையிலை பொருட்கல் மீது 40 சதவீத ஜிஎஸ்டி-க்கு மேல் கூடுதலாக 82 சதவீத கலால் வரியும், குட்கா மீது 91 சதவீத வரியும். பான் மசாலா மீது மொத்தமாக 88 சதவீத வரியும் விதிக்கப்படும்.
மேலும் பான் மசாலா உற்பத்தியாளர்கள் புதிய பதிவு செய்ய வேண்டும். அனைத்து பேக்கிங் இயந்திரங்களையும் CCTV கேமராக்களால் கண்காணிக்க வேண்டும். காட்சிகள் குறைந்தபட்சம் 24 மாதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இயந்திரங்களின் எண்ணிக்கை மற்றும் திறன் குறித்து வரி அதிகாரிகளிடம் அறிவிக்க வேண்டும் என்பது போன்ற புதிய விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த வரி உயர்வு மக்களின் புகைப்பழக்கத்தை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு ஏற்ப இந்தியா தனது புகையிலை வரி விதிப்பை மேம்படுத்தி வருகிறது.
சாதாரண மக்களுக்கு இது கூடுதல் செலவை ஏற்படுத்தும். ஆனால் நீண்டகாலத்தில் உடல்நலம் மற்றும் பொது சுகாதாரத்திற்கு நன்மை தரும் என்று அரசு நம்புகிறது. புகைப்பழக்கத்தை குறைக்க விரும்புவோர் இப்போது சிறந்த நேரம் என்று ஆரோக்கிய நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications