சென்னை: அமெரிக்காவின் முன்னணி நெட்வொர்க்கிங் உபகரண தயாரிப்பு மற்றும் டிஜிட்டல் கம்யூனிகேஷன் நிறுவனமான சிஸ்கோ, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற முக்கியமான துறைகளில் அதிகரித்து வரும் வருமானம் மிக்க வர்த்தகத்தைக் கைப்பற்றக் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளதால், இந்த ஆண்டு இரண்டாவது முறையாக பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
இந்த பணிநீக்க அறிவிப்பு மூலம் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களது பணியை இழக்க நேரிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து தரப்பு நிறுவனமும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் இயங்க வேண்டும் என்பதை முக்கியமான இலக்காகக் கொண்டு இருக்கிறது.

ஆனால் இதை வைத்து எப்படி லாபம் சம்பாதிக்க முடியும் என்பதில் பெரும் தடுமாற்றமாக உள்ளது, தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் பணிகளை எளிமையாக்குவதற்கும், ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் தான் அதிகளவில் பயன்படுத்துகிறது.
கலிபோர்னியாவின் சான் ஜோஸை தலைமையிடமாகக் கொண்ட சிஸ்கோ நிறுவனம், இந்த ஆண்டு பிப்ரவரியில் சுமார் 4,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது. தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள இரண்டாம் சுற்றுப் பணிநீக்கத்தில், பிப்ரவரியில் பணிநீக்கம் எண்ணிக்கைக்கு இணையாக அல்லது அதை விட சற்று அதிகமான ஊழியர்கள் பாதிக்கப்படலாம் என சிஸ்கோ நிறுவனத்தின் உள்வட்டார தகவல்கள் தெரிவித்தன.
இந்த பணிநீக்கம் குறித்த அறிவிப்பு, சிஸ்கோ நிறுவனத்தின் நான்காம் காலாண்டு அறிக்கையுடன் சேர்த்து வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 14) அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 2023 நிலவரப்படி, சிஸ்கோ நிறுவனத்தில் சுமார் 84,900 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த ஆண்டு அமேசான், ஆல்பாபெட், மைக்ரோசாஃப்ட், இன்டெல் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன. இது தவிர, ஈ பே, யூனிட்டி சாப்ட்வேர், டாகுசைன், ஸ்னாப், சேல்ஸ்ஃபோர்ஸ், சிஸ்கோ, ஆரோரா இன்னோவேஷன், கனடாவின் பிளாக்பெரி, சிரியஸ் எக்ஸ்எம், பம்பிள் போன்ற நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications