வங்கிகளில் வழங்கக்கூடிய லோன்களுக்கு நாம் மாதா மாதம் ஈஎம்ஐ செலுத்த வேண்டும். ஒரு ஈஎம்ஐ தவறினாலும், அதற்கு வங்கிகள் அபராதம் விதிக்கும். ஆனால் ஒரு லோனை வாங்கிவிட்டு முன்கூட்டியே பணத்தை செலுத்தி முடித்தாலும் அபராதம் விதிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் லோன் பெற்றவராக இருந்தால் உங்களுக்கு தான் இந்தப் பதிவு.
இன்றைய சூழலில் பர்சனல் லோன், ஹோம் லோன் போன்றவற்றை மக்கள் பெரிதும் சார்ந்திருக்கின்றனர். லோனைப் பெற்று விட்டு கையில் பணம் சேர்ந்தால் உடனே அதை கட்டி முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றனர். ஏனெனில் வங்கிகள் ஹோம் லோனுக்கு 9 முதல் 14 சதவீதம் வரையிலான வட்டியை வசூலிக்கின்றன.
அப்படி இருக்கையில் ஒவ்வொரு மாதமும் அதிக தொகை வட்டிக்கு செல்வதை லோன் பெற்றவர்கள் விரும்புவதில்லை. இதனால் கடன் காலத்திற்கு முன்பே மொத்த பணத்தையும் செலுத்தி விட்டால் வட்டியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் நீங்கள் முன்கூட்டியே பணம் செலுத்துவதற்கும் எக்ஸ்ட்ரா சார்ஜ் செலுத்த வேண்டும். இதைத்தான் பிரீபேமெண்ட் பெனால்டி என்று கூறுகின்றனர்.

பிரீபேமெண்ட் பெனால்டி என்றால் என்ன?: இந்திய ரிசர்வ் வங்கி பெனால்டி விதிப்பதற்கும் சில விதிகளை வகுத்துள்ளது. வங்கிகளில் 2 விதமாக லோன் வழங்கப்படும் ஒன்று ஃப்ளோட்டிங் வட்டி மற்றொன்று ஃபிக்சட் வட்டி. ஃப்ளோட்டிங் வட்டி என்றால் உங்களுடைய கடன்காலம் முழுவதும் வட்டி மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் பிக்சட் வட்டி என்பது நீங்கள் லோன் பெற்ற போது எந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட்டதோ? அதே வட்டி விகிதம் தான் நீங்கள் இறுதியாக இஎம்ஐ செலுத்தும் வரை இருக்கும்.
எனவே பர்சனல் லோன், ஹோம் லோன் என எந்த கடன் வாங்கியிருந்தாலும் சரி, ஃப்ளோட்டிங் வட்டியில் கடன் பெற்றிருந்தால் அதற்கு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் எந்த ஒரு அபராதமும் விதிக்கக் கூடாது. ஃபிக்சட் வட்டியில் லோன் வாங்கியிருந்தால் வங்கிகள் தாராளமாக இந்த ஃப்ரீ பேமெண்ட் பெனால்டி சார்ஜை விதிக்கலாம். லோன் பெற்ற ஒருவர் கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்திவிட்டால் வங்கிக்கு வருகின்ற வட்டி தடைபடும் அல்லவா? அதற்காகத்தான் இந்த ஃபோர்குளோஷர் சார்ஜ் என்று சொல்லப்படுகிற பிரீபேமெண்ட் பெனால்டி விதிக்கப்படுகிறது.
எவ்வளவு பெனால்டி விதிக்கப்படும்?: அபராதத் தொகை கடன் வழங்குனரைப் பொறுத்து மாறுபடும். நீங்கள் கடன் பெற ஒரு அக்ரீமெண்டில் கையெழுத்து போட்டிருப்பீர்கள். அதில் எவ்வளவு ப்ரீபேமெண்ட் சார்ஜ் விதிக்கப்படும் என்பது தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
அபராதம் விதிக்கப்படுகிறது என்பதற்காக லோனை அப்படியே விட்டு விடக்கூடாது. ஒரு கணக்கு போட்டு பார்த்தால் உங்களுக்கு லாபமா? நஷ்டமா? என்பது தெரிய வந்துவிடும். அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் நீங்கள் லோன் செலுத்த வேண்டும் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள், அப்படியானால் மாதாந்திர வட்டி எவ்வளவு? ஒவ்வொரு மாதமும் எவ்வளவு ஈஎம்ஐ செலுத்த வேண்டும்?, கடன் கால முடிவில் எவ்வளவு வட்டி செலுத்தி இருப்பீர்கள் என்பதை தனியாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதோடு நீங்கள் லோனை முன்கூட்டியே முடிப்பதற்கு வங்கிகள் எவ்வளவு அபராத தொகை விதிக்கிறது. கூடுதல் கட்டணங்கள் ஏதேனும் கேட்கப்படுகின்றனவா? என்பதையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் கணக்கிட்ட வட்டி மற்றும் அசல் தொகை மற்றும் வங்கிகள் கூறும் அபராதத் தொகை ஆகியவற்றை ஒப்பிட்டு பாருங்கள். முடிவு உங்களுக்கே தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications