முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் வளர்ச்சியை பரவலாக்குவதில் கவனம் செலுத்துகிறது. தொழில் உற்பத்தி மட்டுமில்லாமல் ஐடி துறை சார்ந்த வளர்ச்சிகளும், இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.
அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு அங்கேயே ஐடி வேலைகள் கிடைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தமிழ்நாடு அரசு டைடல் நியோ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. டைடல் நியோ திட்டத்தின்படி தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் டைடல் பார்க்குகள் அமைக்கப்படுகின்றன.

சென்னையில் ஐடி துறை வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது டைடல் பார்க். அந்த வகையில் சென்னை டைடல் பூங்காவை ஒரு மாடலாக கொண்டு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மினி டைடல் பூங்கா அமைத்து வருகிறது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கே படிப்படியாக டைடல் நியோ ஐடி பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
முதல்கட்டமாக வேலூர், விழுப்புரம் ,சேலம் ,தஞ்சாவூர் ,காரைக்குடி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் ஏற்கனவே டைடல் பூங்காக்கள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு விட்டன. இந்த நிலையில் தற்போது திருவண்ணாமலை ,நாமக்கல், கரூர் , ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், நெல்லை ஆகிய பகுதிகளிலும் டைடல் நியோ பூங்காக்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவின் கடைகோடி மாவட்டமாகவும் தமிழ்நாட்டின் தொடக்க புள்ளியாகவும் இருக்கக்கூடிய கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐடி வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான டைடல் நியூ பார்க் நிறுவப்பட உள்ளது. ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடங்கப்பட்ட டைடல் நியோ பூங்காக்கள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. பல்வேறு ஐடி மற்றும் ஐடி சேவை சார்ந்த நிறுவனங்கள் இங்கே தங்களுடைய அலுவலகங்களை அமைத்து ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தந்துள்ளன.
இதனை அடுத்து கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரன் தாலுகாவில் அமைந்துள்ள நாகர்கோவில் தெற்கு கிராமத்தில் ஐடி வேலையை உறுதிப்படுத்தும் வகையில் அரசு டைடல் பூங்கா அமைக்கிறது. 38.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய டைடல் நியோ பார்க் கட்டமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் கன்னியாகுமரி டைடல் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டினார். இங்கே ஐடி நிறுவனங்கள், ஜிசிசி மையங்கள், பிபிஓக்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இடம்பெறும் வகையில் அலுவலகம் கட்டப்படவுள்ளது. டைடல் நியோ பார்க் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் சுமார் 600 பேருக்கு ஐடி சார்ந்த வேலைகள் கிடைக்கும். தடையற்ற மின்சார வசதி மற்றும் நவீன வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தி தரப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த பூங்கா பயன்பாட்டுக்கு வரும் போது கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள் ஐடி வேலைக்காக சென்னை வரை பயணம் செய்ய வேண்டிய தேவை இருக்காது, அவர்களின் மாவட்டத்திலேயே ஐடி வேலை உறுதியாகிவிடும். இது மேலும் அந்த மாவட்ட இளைஞர்களை ஐடி சார்ந்த படிப்புகளை நோக்கி செல்ல ஆர்வம் தரும்.


Click it and Unblock the Notifications