கோவை கொடிசியா வளாகத்தில் இன்றும், நாளையும் (அக்.9, 10) நடைபெறும் உலகப் ஸ்டார்ட்அப் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்குடன் செயல்படுவதாக உறுதி அளித்தார்.
சட்டம் ஒழுங்குதான் தொழில்துறையின் ஆதாரம் : மாநாட்டில் பேசிய முதல்வர், ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சிதான் அதன் முன்னேற்றத்தின் அடையாளம் என்றும், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலத்தை தேடிதான் தொழில்துறையினர் வருவார்கள் என்றும் குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டில் நிம்மதியாக தொழில் நிறுவனம் நடத்தலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில்தான் இதுபோன்ற மாநாடுகள் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திராவிட மாடல் அரசின் கனவு : திமுக அரசின் முக்கிய நோக்கமே, தமிழ்நாடு முழுவதும் ஸ்டார்ட்அப் (Start-up) குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான். உயர் தொழில்நுட்பம் வாய்ந்த மற்றும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எண்ணற்ற முதலீடுகளை அரசு ஈர்த்துள்ளது. புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள் தொழில்துறைக்குள் வர வேண்டும். உலகின் தலைசிறந்த ஸ்டார்ட்அப் மையமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் மாபெரும் கனவு.
அரசின் திட்டங்கள் பெண்கள், இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலை மக்கள் என அனைத்துத் தரப்பு மக்களிடமும் சென்றடைவதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில், மத்திய அரசின் தளத்தில் தமிழகத்தில் இருந்து 6 மடங்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறந்த ஸ்டார்ட்அப் கொண்ட மாநிலங்கள் பட்டியலில், 2018-ஆம் ஆண்டில் கடைசி இடத்தில் இருந்த தமிழகம், இந்த 4 ஆண்டுகளில், 2022-ஆம் ஆண்டில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதில் சரிபாதி நிறுவனங்களை பெண்களே தலைமையேற்று நடத்துவது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டு நிறுவனங்களில் அரசு முதலீடு செய்வதற்காக, ரூ. 100 கோடி மதிப்பில் 'இணை உருவாக்க நிதியம்' (Co-creation Fund) தொடங்கப்படும். இந்த நிதியத்தின் மூலம் புதிய முதலீட்டு நிறுவனங்கள் உருவாகும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மாநாட்டில் மாற்றுத்திறனாளிகள் 5 பேர் மற்றும் மாற்றுப் பாலினத்தவர் 4 பேருக்கு தொழில் தொடங்குவதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த மாநாட்டில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ரஷ்யா, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, ஜப்பான், மலேசியா உட்பட 40 நாடுகளை சேர்ந்த 300 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மேலும், 750 ஸ்டால்கள், 75-க்கும் மேற்பட்ட தொழில் வளர் மையங்கள், 10 யூனிகார்ன் நிறுவனங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications