முதல்வர் விஜய் இன்று கரூர் செல்ல உள்ள நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் முதல் நிகழ்ச்சியாக வெண்ணைமலை அட்லஸ் கலையரங்க மைதானத்தில் நடைபெறக் கூடிய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தவெகவினரும், மக்களுக்கும் காலையில் இருந்தே கூட துவங்கியுள்ளனர்.
தேர்தலுக்கு முன்பு விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் இறந்த பின்பு முதல் முறையாக முதல்வராக கரூர் வருகிறார் என்பதால் பல எதிர்பார்ப்புகளும், கருத்துக்களும் நிலவுகிறது. இதேவேளையில் விஜயை சந்திக்க கரூர் மக்களும் தவெகவினரும் காலையில் இருந்தே காத்திருக்க துவங்கியுள்ளனர்.

கரூர் பைபாஸ் சாலையில் நடக்கும் இக்கூட்டத்திற்கு காலை 7 மணி முதலே கியூ ஆர் கோடு அடங்கிய அட்டையுடன் தவெக கட்சியினர் வர துவங்கியுள்ளனர். இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு பணிகளும், முன்னேற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளது, குறிப்பாக குடிநீர் ஏற்பாடுகள், முதலுதவி போன்ற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 5000 பேர் கலந்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது வெயிலின் தாக்கம் குறைக்க டென்ட் போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் விஜயை காணவும், இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவும் காலை 6-7 மணியில் இருந்து மக்கள் கூட்டம் வர துவங்கியுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் அனைவரும் QR கோடு கொண்ட பாஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற வகையில் திட்டமிடப்பட்டு உள்ளதால். இதனால் கூட்ட நெரிசலை பெரிய அளவில் வருவதை தவெக-வினர் தடுத்துள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி காலை 11 மணி முதல் 1 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லஸ் கலையரங்க மைதானத்தில் நடப்பது மக்கள் சந்திப்பு கூட்டம் மட்டுமே என்றாலும், விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும், தவெகவினர் மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
அட்லஸ் கலையரங்க மைதானம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மத்தியிலான இடைப்பட்ட 10 கிமீ தொலைவிற்கு விஜய் ரோட் ஷோ நடத்த உள்ளார், இதன் மூலம் கூட்டத்திற்கு வர முடியாத மக்களும் விஜயை இதில் சந்திக்க முடியும் என்பதால் அதிகப்படியான மக்கள் கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சாலையில் இரு பக்கமும் பேரிகேட் அமைத்து சுமார் 6000த்திற்கும் அதிகமான போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications