தமிழகத்தில் வீட்டு மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் பத்திரப்பதிவு முறையில் முக்கியமான மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி இவற்றுக்கான பத்திரப் பதிவை, சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் செல்லாமலேயே ஆன்லைன் மூலம் மேற்கொள்ளும் 'Presence-less Registration' முறையை தமிழக முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
இந்த புதிய முயற்சியானது, பத்திர பதிவு அலுவலகங்களுக்கு செல்லும் தேவையை குறைத்து, பதிவு முறையை எளிமையாகவும் வெளிப்படையாகவும் மாற்றும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி சொத்துகளை பதிவு செய்ய விரும்புவோர், பதிவுத் துறையின் இணையதளத்தில் (TNREGINET) Login ID உருவாக்கி, தங்களது சொத்து ஆவணங்களை ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும்.

சொத்தினை விற்பனை செய்யும் நபர், வாங்கும் நபர் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவரும் தங்கள் ஆதார் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை, சார்பதிவாளர் 24 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து, பதிவை முடிக்க வேண்டும். ஒருவேளை ஆவணங்களில் குறைகள் இருந்தால், அவை திருத்தத்திற்காக அனுப்பப்படும் அல்லது நிராகரிக்கப்படும். திருத்தப்பட்ட ஆவணங்களை 30 நாட்களுக்குள் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்டதும், சார்பதிவாளர் தனது டிஜிட்டல் கையொப்பத்தை இடுவார். அதன் பிறகு, அந்தப் பதிவு செய்யப்பட்ட ஆவணம் பயனாளி லாகினில் பதிவேற்றப்படும். எனவே வீட்டில் இருந்தே இதனை டவுன்லோடு செய்து நாம் சட்டப்பூர்வ ஆவணமாக பயன்படுத்தலாம்.
போலி ஆவணங்களை தடுக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசு பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை இதில் சேர்த்துள்ளது. ஒவ்வொரு ஆவணத்தின் பதிவிலும் ஐந்து வண்ணங்கள் கொண்ட மாறும் தன்மை கொண்ட (Dynamic Random Five Colours) குறியீடு இருக்கும். இது ஆவணத்தின் உண்மைத்தன்மையை சரிபார்க்க உதவும்.
ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் QR குறியீடு அச்சிடப்பட்டிருக்கும். இதில் ஆவண எண், பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் ஆவணத்தின் தன்மை போன்ற விவரங்கள் இடம்பெறும். டிஜிட்டல் கையொப்பம் மூலம் சரிபார்க்கப்படும்போது, ஆவணத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தால், அந்த பகுதியில் 'X' குறியீடு காட்டப்படும். இதனால் ஆவணங்களில் முறைகேடு நடப்பதை தடுக்க முடியும் என்கின்றனர் அதிகாரிகள்.
பதிவு முடிந்த பிறகு, ஆன்லைன் வழியாகவே வண்ணப் பிரதி நகல்களை 60 நாட்கள் வரை இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 60 நாட்களுக்கு பின் சான்றளிக்கப்பட்ட நகல்கள் கருப்பு-வெள்ளையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்படும். ரியல் எஸ்டேட் வல்லுநர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். முன்பு ஒரு பத்திர பதிவை முடிக்க பல நாட்கள் தேவைப்பட்ட நிலையில், தற்போது 3 முதல் 5 நிமிடங்களிலேயே இந்த நடைமுறையை முடிக்க முடியும். இந்த திட்டம் தற்போது முதல் முறையாக விற்கப்படும் வீட்டு மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியிலேயே இதற்காக பத்திரப்பதிவு சாப்ட்வேரில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் தேர்தல் முடிந்து விஜய் தலைமையிலான அரசு இதனை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. எனவே முதன்முறையாக சொத்து வாங்குவோர் இனி பத்திரப்பதிவுக்கு அலைய வேண்டாம்.


Click it and Unblock the Notifications

