தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் தனது முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணமாக லண்டன் செல்கிறார். முதலமைச்சரின் இந்த லண்டன் பயணம் மூலம் பல்வேறு முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் நாளை அதாவது செப்டம்பர் 10ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, செப்டம்பர் 11 அன்று லண்டனை சென்றடைகிறார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பதால் தொழில்துறையினர் மிகவும் உற்றுநோக்கும் பயணமாக உள்ளது.

தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கவும், தொழில்முனைவோர்கள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து பேசவும் முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் மேற்கொள்கிறார். லண்டனில் தங்கியிருக்கும் நாட்களில், தமிழ்நாட்டில் முதலீடுகளுக்கு உள்ள சாதகமான சூழல்கள் குறித்தும் அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் அவர் பல்வேறு நிறுவனங்களிடமும் எடுத்துரைக்க இருக்கிறார். 16ஆம் தேதி அங்கிருந்து மீண்டும் தமிழ்நாடு திரும்புகிறார்.
அண்மையில் தான் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு சார்பாக சென்னையில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அப்போது 97 நிறுவனங்களுடன் 67,482 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் விஜய் முன்னிலையில் சில முக்கிய பன்னாட்டு நிறுவனங்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பிரிட்டனில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக முதலமைச்சர் விஜய் நவீன வசதிகளுடன் கூடிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி தமிழகத்தில் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில், லண்டனில் உள்ள மோட்டார் ஸ்போர்ட்ஸ் வசதிகள் மற்றும் பந்தய சுற்றுவட்டப் பாதைகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனில் கார் பந்தய நிகழ்ச்சிக்காக நடிகர் அஜீத்குமார் சென்றிருப்பதால் இந்த பயணத்தில் இருவரும் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இது தவிர தன்னுடைய பயணத்தின் ஒரு பகுதியாக லண்டனில் வசிக்கும் தமிழர்களை சந்தித்து முதலமைச்சர் விஜய் கலந்துரையாட இருப்பதாக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாக தி இந்து நாளிதழ் செய்தி கூறுகிறது. முதலமைச்சரின் இந்த பயணத்தின் போது முதன்மை செயலாளர்கள் மற்றும் வழிகாட்டி தமிழ்நாடு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் உடன் செல்ல உள்ளனர்.
முன்னதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் சென்னைக்கு வருகை தர இருப்பதால் முதலமைச்சரின் பிரிட்டன் பயண திட்டத்தில் மாற்றம் இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால், அந்த தகவல்களை மறுத்துள்ள வட்டாரங்கள், திட்டமிட்டபடி முதல்வரின் வெளிநாட்டு பயணம் எந்த மாற்றமும் இல்லாமல் உறுதியாக செல்லும் என தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications


