2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு தமிழக மக்களின் ஆதரவைப் பெற்று சுமார் 107 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய் இன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கமே அதிரும் வகையில், இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். பல முன்னணி அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், சில அதிரடி அறிவிப்புகளையும் உடனடியாக அறிவித்தார்.
முதல் கையெழுத்து: தமிழக முதலமைச்சராக பதவியேற்ற சிறிது நேரத்திலேயே 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற விஜய்யின் முதல் அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கான பாதுகாப்பு: தமிழகத்தில் மிக முக்கியமான பிரச்சினையாக கருதப்படும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் சரி செய்வதற்காக "சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை அமைக்கப்படும்" என்ற ஆணையையும் பிறப்பித்தார் முதல்வர் விஜய். தமிழகத்தில் மற்றொரு முக்கிய பிரச்சினையாக இருப்பது போதை பொருள்களால் ஏற்படும் குற்றங்கள். அதற்கிணங்க அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களில் போதைப் பொருள் தடுப்பு படையை உருவாக்கவும் கையெழுத்திட்டுள்ளார்.
அடுத்ததாக பேசிய முதல்வர் விஜய், வழக்கம் போல் தன்னுடைய பானியில் பேச்சை தொடங்கினார். "என் நெஞ்சில் குடியிருக்கும் என ஆரம்பித்து, பிறகு ஒவ்வொன்றாக தமிழகத்திற்கு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதோடு முதல்வர் விஜய் அரசாங்கத்தின் தற்போதைய நிலை குறித்தும் சுட்டிக்காட்டினார். தமிழகம் தற்போது ரூ.10 லட்சம் கோடி கடனில் இருப்பதாக கூறிய விஜய், அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விரைவில் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் கூறினார்.

"எனக்கு எப்படி பேச்சை தொடங்குவது என்றே தெரியவில்லை. நான் ஒன்றும் அரச குடும்பத்தில் பிறந்தவன் கிடையாது. ஒரு சாதாரண தயாரிப்பாளரின் குடும்பத்தில் இருந்து வந்தவன் தான். உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன். எப்படி திரையுலகில் எனக்கு மகத்தான இடத்தை தந்தீர்களோ? அதே போல் எனக்கு வந்த தடை மற்றும் துன்பங்களை உங்களுடைய சொந்த துன்பமாக கருதி அரசியல் பயணம் தொடங்கியதில் இருந்து எனக்கு பக்கபலமாக நின்றிருக்கிறீர்கள். நான் ஒன்றும் இறைத்தூதன் கிடையாது. உங்களைப் போலவே ஒரு சாதாரண மனிதன் தான். நீங்கள் அனைவரும் என்னோடு சேர்ந்து நிற்கும் போது எந்த சவால் வந்தாலும் அவற்றை எதிர்த்து போராடுவேன்.
தமிழக மக்களிடம் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பேன். தற்போதைய சூழலை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர் எங்களுடைய நிர்வாகத்தை கையில் எடுப்போம். அரசியலுக்குள் நுழைந்த பிறகு தான் நிர்வாகப் பொறுப்பு மற்றும் தற்போதைய சூழல், எங்களுக்கு முன்னால் இருக்கும் சவால்கள் அனைத்தும் தெரிய வருகிறது. நான் சொன்ன வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன். ஆனால் எனக்கு சற்று அவகாசம் தாருங்கள்" என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.
பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் விஜய் பேசியது தமிழக மக்களுக்கு எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. திரை துறையில் சிகரம் தொட்டது போல, அரசியல் களத்திலும் புதிய மாற்றங்களை கொண்டு வருவார் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. இவருடைய நிர்வாகம் தமிழக மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications