தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கு மத்தியில் புதிய முதலீட்டை ஈர்ப்பதில் பெரும் போட்டி இருந்து வரும் வேளையில், புதன்கிழமை சென்னையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் முதலீட்டாளர் மாநாடு நடத்தத் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த முதலீட்டாளர் மாநாட்டில் கிட்டத்தட்ட 70 நிறுவனங்களுடன் சுமார் 50000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளதாகத் தெரிகிறது.

அமைச்சர் கீர்த்தனா தலைமையில், தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சகம் உலகளாவிய உற்பத்தியாளர்களை ஈர்ப்பதிலும், ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உண்மையான முதலீடாக மாற்றவும் தீவிரமாக முயற்சி செய்து வரும் வேளையில் நாளை முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட உள்ளது.
இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரேசில் நாட்டின் WEG போன்ற பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்காக ஒப்பந்தம் செய்ய உள்ளது. மேலும் சில முதலீடுகள் ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தம் மீதான கூடுதல் முதலீட்டிற்கானதாகவும் இருக்கும்.
மேலும் இந்த மாநாட்டில் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவும், புதிய திட்டங்களை திறக்கவும் உள்ளார் முதல்வர் விஜய்.
இந்த மாநாடு குறித்து இன்று அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட டிவிட்டர் பதிவில், தமிழகத்தில் இரண்டாவது வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் மாற்றம் மாநாடு (Vettri Tamil Nadu Investment and Conversion Conclave) நாளை நடைபெற உள்ளது.
கடந்த 6 மாதங்களில் தமிழ்நாடு அரசு அதிக அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதில் வெற்றிக் கண்டது, ஆனால் ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதுடன் முதலீடுகளின் வெற்றி முடிந்துவிடுவதில்லை. ஒப்பந்தம் செய்யப்பட்ட திட்டங்கள் உண்மையில் செயல்பாட்டுக்கு வருகிறதா? புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுகிறதா, உற்பத்தி அதிகரிக்கிறதா, வேலைவாய்ப்புகள் உருவாகிறதா என்பதே முக்கியம்.
முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையில், தொழில்துறைக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே அரசின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு ஆகஸ்ட் மாதம் விஜய் தலைமையிலான அரசு அமைந்து சுமார் 3 மாதங்கள் முழுமையாக முடிந்ததை அடுத்து முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டை Vetri Tamil Nadu Conclave 2026 என்ற பெயரில் நடத்தியது.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் விஜய் மற்றும் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா முன்னிலையில் சுமார் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 67,452 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளையும் 1,06,998 பேருக்கான வேலைவாய்ப்பையும் பெற முடியும் என அறிவிக்கப்பட்டது.
இந்த மாத துவக்கத்தில் ஆந்திர மாநிலம் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்தது குறிப்பித்தக்கது.


Click it and Unblock the Notifications