வேலைவாய்ப்பு , கல்வி, தொழில் உள்ளிட்டவைகளுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னையை நோக்கி பயணம் செய்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் சென்னை நகருக்குள் மக்கள் தொகை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
எனவே தமிழ்நாடு அரசு சென்னை சுற்றியுள்ள பகுதிகளிலும் பொருளாதார வளர்ச்சியை கொண்டு வரும்போது மக்கள் தொகை மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை மற்ற பகுதிகளுக்கும் பரவலாகும் என நம்புகிறது. இதனால் தான் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னை மாநகர மேம்பாட்டு ஆணையமான சிஎம்டிஏ , அவுட்டர் ரிங் சாலையை சுற்றியுள்ள பகுதியில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது .

இது தொடர்பாக வெளியான தகவலில் அவுட்டர் ரிங் சாலையை சுற்றியுள்ள நான்கு பகுதிகளில் பொருளாதார வழித்தடம் அதாவது எக்னாமிக் காரிடார் ஆக மாற்றி பல்வேறு துறைகளுக்கான வளர்ச்சி மையமாக மாற்ற திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான மேம்பாட்டு திட்டம் விரைவில் இறுதி செய்யப்பட இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவுட்டர் ரிங் சாலையை சுற்றியுள்ள 62 கிலோமீட்டர் பகுதிகளும் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என சொல்லப்படுகிறது.
இந்த பகுதிகளில் ஜிசிசி மையங்கள் எனப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் திறன் கிளைகள், ஐடி நிறுவனங்கள் மற்றும் லாஜிஸ்டிக் பார்க்குகள், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் , ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி ஆலைகளின் கிடங்குகள் உள்ளிட்டவை கொண்டுவரப்பட உள்ளன. இவ்வாறு பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சிக்கான பகுதியாக இந்த அவுட்டர் ரிங் சாலையை சுற்றியுள்ள பகுதிகள் மாறுவதற்கு தேவையான திட்டமிடலை தான் தற்போது சென்னை மாநகராட்சி மேம்பாட்டு ஆணையமான சிஎம்டிஏ கையில் எடுத்திருக்கிறது .
இதற்கு ஏற்ற வகையில் அந்த பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் , போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவற்றை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதன்படி மீஞ்சூர் பகுதி தொழில் மற்றும் லாஜிஸ்டிக் சம்பந்தப்பட்ட மேம்பாட்டு மையமாக மாற்றப்பட இருக்கிறது. செங்குன்றம் பகுதி நவீன பசுமை மண்டலமாக மாற்றப்படுமாம்.
இந்த பகுதியில் பசுமை சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் அமைக்கப்பட இருப்பதாக சிஎம்டிஏ அதிகாரிகள் கூறுகின்றனர். பூந்தமல்லியை பொறுத்தவரை அது ஒரு வணிக மாவட்டமாக செயல்படும் என்றும் கூறுகின்றனர். வண்டலூர் ஐடி மற்றும் ஐடி சேவை சார்ந்த நிறுவனங்கள் , சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மையமாக மாற்றப்படும் என்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்காக நில தொகுப்பு திட்டத்தின் மூலம் பல்வேறு உரிமையாளர்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தி மேம்பாட்டு பணிகளுக்காக பயன்படுத்த போகிறோம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications