கொரோனா வைரஸ் மனிதர்களின் உடல் நலத்தை மட்டும் பாதிக்கவில்லை. பொருளாதார வாழ்கையையும் சிதைத்துக் கொண்டு இருக்கிறது.
கொரோனா லாக் டவுன் அறிவிக்கப்பட்ட போது, இந்தியாவில் பல கோடி பேருக்கு வேலை இழப்புகள் ஏற்பட்டது. கோடிக் கணக்கான மக்களுக்கு, முதலாளிகள் மற்றும் கம்பெனிகள் சம்பளத்தில் கை வைத்தார்கள். இன்னும் எத்தனையோ கோடி மக்களுக்கு சம்பள பாக்கியையே பெரிதாக பாக்கி வைத்திருக்கிறார்கள்.

மேலே சொன்ன பிரச்சனைகளில் சம்பளப் பிடித்தம், சம்பளக் குறைப்பு போன்ற பிரச்சனைகளைக் கூட ஓரளவுக்கு சமாளித்துவிடலாம். ஆனால் வேலை இழப்புகளைத் தான் ஜூரணித்துக் கொள்ள முடியவில்லை.
கொரோனா லாக் டவுன் காலத்தில், அதாவது மே 2020-ல் இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் 23.5 சதவிகிதமாக இருந்தது. ஜூன் மாதத்தில் இருந்து மெல்ல லாக் டவுன் எல்லாம் படிப் படியாக தளர்த்தப்பட்டன. இந்த ஜூன் 2020-ல் வேலை இல்லா திண்டாட்டம் 11 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது.
இந்த அளவுக்கு, வேலை இல்லா திண்டாட்டம் குறைந்து இருப்பது சந்தோஷம் தான். ஆனால் கொரோனா லாக் டவுன் காலத்துக்கு முன்பு, இந்தியாவில் வேலை இல்லா தீண்டாட்டம், 8 சதவிகிதத்துக்கும் கீழ் தான் இருந்தது எனச் சுட்டிக் காட்டி இருக்கிறது CMIE (Centre for Monitoring Indian Economy) என்கிற அமைப்பு.
கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் இருந்து இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் நிதானமாக அதிகரித்து வருவதாகவும் சொல்லி இருக்கிறது CMIE அமைப்பு. 2017 - 18 நிதி ஆண்டில் சராசரியாக வேலை இல்லா திண்டாட்டம் 4.6 சதவிகிதமாகத் தான் இருந்தது.
ஆனால் அதற்கு அடுத்த 2018 - 19 நிதி ஆண்டில் இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் 6.3 சதவிகிதமாகவும், 2019 - 20 நிதி ஆண்டில் வேலை இல்லா திண்டாட்டம் 7.6 சதவிகிதமாகவும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா லாக் டவுன் தளர்த்தப்பட்ட பின்பும், வேலை இல்லா திண்டாட்டம் 11 சதவிகிதமாக இருக்கிறது. மீண்டும் பழைய நிலைக்கு வேலை இல்லா திண்டாட்டம் வரவில்லை. அதற்கு பொருளாதாரம் மீள்வதில் இருக்கும் மந்த நிலை தான் காரணம் எனவும் சொல்கிறார்கள்.
எப்போது பொருளாதாரம் மீண்டு வந்து, வேலை இல்லா திண்டாட்டம் குறையும் என்பது எல்லாம் அரசு கையிலும், கொரோனா கையிலும் தான் இருக்கிறது.


Click it and Unblock the Notifications