சில நேரங்களில் ஹோம் லோன் பெறும்போது விண்ணப்பிப்பவருக்கு சம்பளம் குறைவாக இருந்தால் அவர் மற்றொருவரை சேர்த்துக் கொண்டு கூட்டாக விண்ணப்பிக்கலாம். இப்படி விண்ணப்பிக்கும் இருவரில் ஒருவர் துரதிஷ்டவசமாக இறந்து விட்டால் நிலுவையில் உள்ள கடனுக்கு யார் பொறுப்பு? என்ற பல சந்தேகங்கள் உங்களுக்கு வரக்கூடும். இன்னும் சிலர் ஒருவர் இறந்து விட்டால் கடன் தொகையை குறைத்துக் கொள்வார்கள் அல்லது தள்ளுபடி செய்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. கூட்டாக லோன் பெற்ற இருவரில் ஒருவர் இறந்தால் சட்ட நடைமுறைகளின்படியே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கடன் தள்ளுபடி ஆகாது: கூட்டாக கடன் பெற விண்ணப்பித்து யார் கடன் வாங்கி இருந்தாலும் சரி இருவருமே அந்த கடனுக்கு தனித்தனியாக பொறுப்பேற்க வேண்டி இருக்கும். இருவரும் சேர்ந்து கடன் பெற்றதாகத் தான் வங்கிகள் கருத்தில் கொள்ளும். கடனை திருப்பி செலுத்தும் பொறுப்பு இருவருக்குமே முழுமையாக உண்டு.
இருவரில் ஒருவர் இறந்தாலும் மற்றொருவர் நிலுவையில் உள்ள மொத்த கடனையும் செலுத்த வேண்டும். உதாரணமாக இரண்டு நபர்கள் சேர்ந்து ரூ.50 லட்சம் கடன் பெற்றிருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். ரூ.42 லட்சம் கடன் நிலுவையில் இருக்கும் போது ஒருவர் இறந்தால் உயிருடன் இருக்கும் மற்றொரு நபர் முழு தொகையையும் செலுத்த வேண்டும்.

ரூ.42 லட்சத்தில் ரூ.21 லட்சம் மட்டும் செலுத்தினால் போதும் என்று நினைக்க வேண்டாம். மீதமுள்ள முழு தொகையையும் உயிருடன் இருப்பவர் செலுத்தியாக வேண்டும். பொதுவாக கடன் பெறும்போது ஏதாவது ஒன்றை பிணயமாக வழங்க வேண்டும். அப்படி உயிருடன் இருப்பவருக்கு மட்டுமே சொத்து இருக்கிறது. அவர் அதை பிணயமாக வழங்கியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படி இருந்தாலும் கடன் பெரும் அக்ரீமெண்டில் இருவர் சேர்ந்து கையெழுத்திட்டிருந்தால் உயிருடன் இருக்கும் மற்றொரு நபரிடம் தான் வங்கி முழு கடனையும் வசூலிக்க முற்படும்.
சட்டப்பூர்வ வாரிசுகள் பங்கேற்க வேண்டுமா?: இறந்த நபரின் சட்டப்பூர்வ வாரிசுகள் அவருடைய கடனுக்கு பொறுப்பேற்க வேண்டுமா என்ற குழப்பம் உங்களுக்கு வரலாம். இறந்து போனவரின் சொத்துக்கள் பிணையமாக வைக்கப்பட்டிருக்கிறது என்றாலும் அவருடைய சட்டப்பூர்வ வாரிசுகளை தான் சென்றடையும். மேலும் கடன் பெறும் அக்ரீமெண்டில் இறந்தவரின் வாரிசுகள் கையெழுத்து போடவில்லை என்றால் கண்டிப்பாக அவர்கள் தங்கள் வருமானத்திலிருந்தோ அல்லது சேமிப்பிலிருந்தோ கடனை அடைக்கத் தேவையில்லை.
ஆனால் இறந்தவரின் சொத்து பிணையமாக வைக்கப்படும் பட்சத்தில் நிலுவைத் தொகையை வசூலிக்க வங்கிகள் அந்த சொத்தை ஏலம் விட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் உள்ளது.
தற்காப்புக்கு லோன் இன்சூரன்ஸ் வாங்கி வைக்கலாமா?: கடன் வாங்கும் போது லோன் இன்சூரன்ஸ் வாங்கி வைக்கலாம். இது உங்களுக்கு மிகுந்த பாதுகாப்பை வழங்கும். மேலும் இறந்தவரின் குடும்பத்திற்கு இக்கட்டான நேரத்தில் பெரும் நிவாரணமாக இருக்கும். லோன் இன்சூரன்ஸ் வாங்கி வைத்திருந்தால் கடன் வாங்கி வைத்துவிட்டு இறந்தவர் எவ்வளவு நிலுவைத் தொகையை வைத்திருக்கிறாரோ? எடுத்திருக்கும் பாலிசியை பொறுத்து காப்பீட்டு நிறுவனமே அந்த கடனை வங்கிக்கு செலுத்தி விடும்.
இரண்டு நபர்கள் சேர்ந்து பாலிசி வாங்கியுள்ளனர் என்றால் இறந்தவருக்கு எவ்வளவு காப்பீட்டு தொகை இருக்கிறதோ அந்த தொகையை நிறுவனம் செலுத்தி விடும். மீதமுள்ள தொகையை உயிருடன் இருப்பவர் செலுத்த வேண்டும். இருவருமே பாலிசி வாங்கவில்லை என்றால் வேறு வழியே இல்லை. ஒன்று இறந்தவரின் சொத்தை வைத்து வங்கிகள் பறிமுதல் செய்யும். அப்படி இல்லை என்றால் உயிருடன் இருப்பவர் கடனை செலுத்தியாக வேண்டும். எனவே கூட்டாக கடன் பெற விண்ணப்பிக்கும் போது நீங்கள் வாங்கும் பாலிசி ஜாயிண்ட் லைஃப் பாலிசியா அல்லது சிங்கிள் லைஃப் பாலிசியா என்பதை தெளிவாக கேட்டுக்கொண்டு பிறகு தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications
